Pages

Saturday 8 September 2012


இரவல் ஒளியில் தனித்திருந்த நிலவின்
கண்ணீர் போல் ஒற்றைத்துளிகளாய்
கரங்களில் இறங்கியது அந்த மழை.

முன்னெப்போதோ நுகர்ந்திருந்த மண்வாசனையும்
மகரந்தத்தின் ரகசிய மொழிகளை
களவாடி களித்திருந்த வண்டின் ஓசையும்
சேர்ந்து வந்ததைப்போன்ற ஒரு பிரமையும்
அக்கணத்தில் தோன்றி முகிழ்த்தலானது.

எங்கும் ருசித்திராத , ருசியே இல்லாத ஒரு
ருசியாய் இந்த மழை இன்றும் நாவில்
உருண்டோடியிறங்கியது .

மென் மழைத்துளிகளாய் இறங்கிக்கொண்டிருந்து
பெரும் மழையாய் வீழத்தொடங்கிய அக்கணம்
அற்றை நாளின் வெப்பத்துணுக்குகள்
மெல்ல மழையின் சரீரத்திற்கு இரையாகத்தொடங்கின.

தழலென்றிருந்த தேகம் தணிந்து தளரத்தொடங்க
என்னிருப்புக்கள கரையத்தொடங்கின
முழுதுமாய் மழைத்துளிகளாய் நிலத்தில்
வீழ்ந்து தெறித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்

சிதறல் துளிகளாலான என்னை நானே
ஒன்று சேர்க்க முயன்று தோல்வியுறுகிறேன்
உணர்வுகள் முகிழ்க்கும் ஏகாந்தத்தின் முன்
போதித்தத்துவம் பெற்று மகிழ்கிறேன்.

எப்பொழுதும் கிடைத்துவிடாத இந்த மகிழ்வின்
கணம் என்றாவது சிறகுடைந்த பறவையாய்
மழைக்கு முன்னான கணத்தினை
நோக்கி என்னை செலுத்திவிடக்கூடும்.

அப்பொழுதும் இந்த மழை வலுவிழந்து
காய்ந்து போகாதிருக்கட்டும்.

No comments:

Post a Comment