Pages

Wednesday 19 September 2012


மணல் வீடுகளாய் குமிந்திருந்த
ஒவ்வொரு ஞாபகத் துணுக்குகளும்
இடைவெளி பற்றிக் கரையத்துவங்கும்
வேளையில் மரணிக்கத்துவங்கியிருந்தேன்.

பொழுது சரியத்துவங்கிய அந்த நொடி
மிகச்சரியான கணமாகப்பட்டது
வாழ்வின் வெளிகள் மிகக்கவனமாய்
தன்னை இருள்சூழ ஆயத்தப்படுத்திக்கொண்டது.

இதுவரை மிகைப்படுத்தாத துயரம் தன்னை
முன்னிலைப்படுத்தத் துவங்கியது என் மரண நொடிக்கு
பிறிதொரு காரணத்தை காரணியாக்க விரும்பாமல்

விம்மிவெடிக்கும் ஒரு நினைவு மட்டும்
வெளியேற தோன்றாமல் உள் நோக்கி
பயணத்தை தொடங்கியது

மிதந்தலையும் காற்றினைக்குறுக்கி இழுத்து
இசைக்கும் குழலிசையாய் உன் நினைவுகளை
நிலை நிறுத்தி சுவாசத்தினை
கமறலென வெளிப்படுத்தி திருப்தியுறுகிறேன்

மிகப்பெரும் சரிவை நோக்கி
உருண்டோடத்துவங்கிய சுவாசம்
மென் தடைகளை வலிப்பிழிந்து
கடக்கத்துவங்கிய கணம் மெல்ல வெளியேறுகிறேன்.

Monday 17 September 2012


உனக்கு மட்டும் நான் வித்தியாசப்பட்டதின்
காரணம் புரிந்தும் எனக்கு
ஒன்றேனும் வித்தியாசமாகப்படவேயில்லை
உன்னை ஒவ்வொரு முறை பார்க்கையிலும்.


கவிந்து நடக்கும்போதோ, 
கண்ணோடு நோக்கையிலோ
வார்த்தைகளில் குவிந்த கவனம்
மாறியதேயில்லை.

உணர்வுகளும், கருத்துக்களும்
பரிமாறிய இடங்களில்
பார்வை பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாயும்
நினைவிலில்லை.


தவறவிட்ட பேருந்துகளின் பயணங்கள்
உன் வாகனத்தில் தொடர்கையில் நானும்
என்றேனும் கவனித்தொதுங்கியிருக்கலாம்
தெரியாமல் உன் மேல் பட்டதை. 


விசைப்பலகையில் வார்த்தைகள்
தவறுதலாய் அழுத்தப்பட்டதாகவே 
இப்பொழுதும் உணர்கிறேன் நம்
தவறுகளை .

விரல் பிடிக்கையில் எவ்வித 
செல் மாற்றங்களும் உனக்குள்
நிகழவில்லையெனில் என் தோள்
பற்றும் தோழனாக இரு.


எல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே
தான் எப்பொழுதும் திருப்தி எனக்கு

தாகம் தணித்துவிடவோ
கறைகளை கழுவிடவோ
பச்சைகளை செழித்து விடவோ
கூரான கற்களை முனைமழுக்கிடவோ
இறுமாந்திருந்த கற்களை துகள்களாக்கிடவோ
கரைப்புரண்டு ஓடி கடலில் கலந்திடவோ
தான் தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்

சில வேளைகளில் பிண்டங்களும்
கீழத்தெருக்களின் எச்சில் இலைகளும்
எருமைகளின் சாணக்கழிவுகளும்
திருமணவீட்டின் எஞ்சிய விருந்தும்
ஒன்றாகவே கலந்து மிதந்துவருகின்றன.

இருந்தும் ஒவ்வொருவருக்கான நதியாகத்தான்
என்னை எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்




- நவீன விருட்சத்தில் ...

Saturday 15 September 2012


ஒரு பரிவையோ,
ஒரு மன்னிப்பையோ,
ஒரு காதலையோ யாசிக்காத 
மௌனம் உதிர்ந்து விழுந்த 
ஒரு சருகினைப்போல் 
தன் ஆயுளை முடித்துக்கொள்கிறது.

                          *
ஒரு கவிதையின் இரு வார்த்தைகளுக்குள்
உறங்கும் மௌனம் பிறிதொரு
கணத்தில் ஒரு வார்த்தையாக
வெளிப்பட்டு விடுகிறது.
                         *

தவிப்புகளற்ற மௌனம் 
கடலலைகள் அரித்து செல்லும்
மணற்துகளின் ஏதோ ஒரு துளியாகிறது.

                        *



"முகமூடியணிந்து இடும்
சிரிப்புக்குறீயீடை விட
குரூரம் கசியும் வார்த்தைகளும்
பதிலுரைக்காத அவமதிப்புக்களும்
பேசாத மௌனங்களும்
போதுமானதாய் இருக்கிறது எனக்கு.."


யாரும் புகுந்திட முடியா
வெறுமையை சட்டென நிரப்பி விடுகிறது
ஏதோ ஒரு கவிதை..


முதல் துளி வீழ்ந்த கணம்
மண்வாசனையை பற்றிவந்ததாய் ஞாபகம்
விலக்கப்படாத ஒரு நினைவு
உள்ளுக்கும் வெளிக்குமாய்
கடந்து செல்கின்றது.

இழுத்துப்பிடித்த சுவாசங்களும்
உடல் நிறைத்த மழைத்துளிகளுமாய்
நீட்டித்துக்கொண்டிருக்கிறேன் உனக்கான
என் வாழ்வை.

இருந்தும்
தொடுதலற்ற உன்னுடனான பொழுதுகள்
ஏகாந்தத்தை நீட்டித்தது போல் இந்த
மழை இல்லவே இல்லை.

Saturday 8 September 2012


இரவல் ஒளியில் தனித்திருந்த நிலவின்
கண்ணீர் போல் ஒற்றைத்துளிகளாய்
கரங்களில் இறங்கியது அந்த மழை.

முன்னெப்போதோ நுகர்ந்திருந்த மண்வாசனையும்
மகரந்தத்தின் ரகசிய மொழிகளை
களவாடி களித்திருந்த வண்டின் ஓசையும்
சேர்ந்து வந்ததைப்போன்ற ஒரு பிரமையும்
அக்கணத்தில் தோன்றி முகிழ்த்தலானது.

எங்கும் ருசித்திராத , ருசியே இல்லாத ஒரு
ருசியாய் இந்த மழை இன்றும் நாவில்
உருண்டோடியிறங்கியது .

மென் மழைத்துளிகளாய் இறங்கிக்கொண்டிருந்து
பெரும் மழையாய் வீழத்தொடங்கிய அக்கணம்
அற்றை நாளின் வெப்பத்துணுக்குகள்
மெல்ல மழையின் சரீரத்திற்கு இரையாகத்தொடங்கின.

தழலென்றிருந்த தேகம் தணிந்து தளரத்தொடங்க
என்னிருப்புக்கள கரையத்தொடங்கின
முழுதுமாய் மழைத்துளிகளாய் நிலத்தில்
வீழ்ந்து தெறித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்

சிதறல் துளிகளாலான என்னை நானே
ஒன்று சேர்க்க முயன்று தோல்வியுறுகிறேன்
உணர்வுகள் முகிழ்க்கும் ஏகாந்தத்தின் முன்
போதித்தத்துவம் பெற்று மகிழ்கிறேன்.

எப்பொழுதும் கிடைத்துவிடாத இந்த மகிழ்வின்
கணம் என்றாவது சிறகுடைந்த பறவையாய்
மழைக்கு முன்னான கணத்தினை
நோக்கி என்னை செலுத்திவிடக்கூடும்.

அப்பொழுதும் இந்த மழை வலுவிழந்து
காய்ந்து போகாதிருக்கட்டும்.


உனக்கென்று ஒரு கணம்

ஒரு கணத்தின் மகத்தான
வரத்தினை உனக்கு
அளித்திடக் காத்திருக்கிறேன்
நெடு நாளாய் நீ காத்திருந்த
நொடி இதுவாகத்தான் இருக்க கூடுமென
தெரிந்திருந்தும் பொத்தி வைத்திருந்ததற்காய்
நீ கோபித்து கொள்ளவும் கூடும்
இக்கணத்தினை உனக்கு பரிசாய்
அளித்திட்டால் பல கணங்களாய்
அமிழ்த்தியிருந்த உன் வேட்கைகள்
ஒருசேர என்னை தாக்கவும் கூடும்
தொடர் தகிப்புக்களை
என்னால் தாங்கவியலாது என
மிக மென்மையான காதல்களை
எனக்கு நீ பரிசளிக்கவும் கூடும்
விருப்பு வெறுப்பற்ற
தோழனாயும் நீ என் எதிர்ப்பார்ப்புக்களை
கேலிப்பேசி விடவும் கூடும்
கருணையற்ற மழையைப்போல்
நீ ஒரேயடியாய் என்னை
முகிழ்த்துவிடவும் கூடும்
இவையெல்லாவற்றையும்
நான் தாங்கிவிடவும் கூடும்
இல்லையென்றால்
உன்னிடமிருந்து கூட எனக்கான
அழைப்பு வரக் கூடும்
காலம் மட்டுமே அறிந்த நிகழ்வுக்காய்
உன் திசை நோக்கி நகர்த்துகிறேன்
என் மொத்த பிரியத்தையும்.

அதீதத்தில் வெளியான கவிதை..