காலை கண்விழிப்பு
காபியுடன் நாளிதழ்
அலுவலக ஆயத்தங்களுக்கு
அரக்க பறக்க
ஒத்திசைந்து
சிற்றுண்டியுடன் சிரிப்பு கலந்து
பரிமாறி உன் முகம் நோக்கியே
இருப்பேன் தவறாமல்

தவறிப்போய்கூட
என் முகம் நோக்க மாட்டாய்
நீ - ஆனால் வழக்கம்போல்
உச்சி முகர்ந்து
டாட்டா காண்பித்து மறைவாய்

உன் சட்டை வாசனை
கலைந்திருக்கும் போர்வை
படித்த நாளிதழ்
சாப்பிட்ட தட்டு
இவை எல்லாமே உன்னை
ஒரு நொடிகூட மறக்க விடாது

நீயும் என்னை நினைத்து கொண்டிருப்பாய்
என்ற ஞாபகத்தில் ஓடி சென்று எடுப்பேன்
உன் செல்பேசியின் ஒலிகுரல் கேட்டு
நீயோ சாப்பிடவரமாட்டேன்
என்று ஒற்றை வார்த்தையில் வைப்பாய்

நாம் பேசி மகிழ்ந்த
கணங்கள் மட்டுமே எனக்கு துணையாய்
நாளை கழிப்பேன் நீ வரும்வரை

வழக்கம்போல் உடை மாற்ற ,
இரவு உணவு , தொலை காட்சி
எல்லாவற்றிர்க்கும் குரல் கொடுப்பாய்

சரி ஞாயிறு என்ற ஒரு நாள் உண்டே
நமக்காக என சமாதான படுத்திகொள்வேன்
ஞாயிறும் வரும் எனக்கு
ஞாயிறு உதிக்கும் உனக்கு
10 மணிக்கு

காலை வேலைகள் முடிந்ததும்
மடிகணினியில் மறப்பாய் உலகை
மறந்தும் மடி சாய மாட்டாய்
உலக கதைகள் பேச

கிரிக்கெட் ஸ்கோர்க்கு இடையில்
நான் சமைக்கும் சோறு
மதிய தூக்கம்
விடுமுறை விடைபெறும்

கனவு நாயகர்களை
எப்போதும் சிலாகிப்பாய்

கலவி முடிந்து கிடந்து பேசினால்
காதல் என்றார் உன் நிழல் நாயகன்
கலவியே காதலுடன்
செய் என்கிறேன் உன் நிஜ நாயகி

வேலையிடை வேலையாய்
என்னை காதலிப்பதையும்
ஒரு வேலையாய் கொள்
என் காதல் கணவா