Pages

Monday, 28 May 2012
"
போலி கௌரவம் குறித்து சீனிவாசன் இருமுனைத்தாக்குதல்களுக்கும் சளைக்காமல் பதிலளித்த போதும், அவரை உங்களுக்கென நான் ஒரு வெளி தருகிறேன், உங்கள் முகமூடியிலிருந்து வெளிவாருங்கள் என தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்த கோபி நாத்தின் மற்றொரு முகம் ஆச்சர்யத்தையே தந்தது.. சீனிவாசனை நமக்கு பிடிக்காமல் போனால் அவரின் படங்களை பார்ப்பதை தவிர்க்கபோகிறோம், நமக்கு அதனால் எந்த வித லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.. 

விஜயின் ஆரம்ப கால படங்கள் உண்மையில் எத்தனை பேருக்கு பிடித்து இருக்கும்? இன்று அவருக்கு இருக்கும் ஒரு இமேஜ் போலியான கௌரவம் தானே.. அவருக்கு மட்டுமல்ல அரசியல் வாதிகளிலிருந்து , பணம் இருக்கும் அனைவரும் போலி கௌரவத்தின் அடையாளத்தில் தான் வாழ்கிறார்கள்.. 

கோபிநாத்தே சீனிவாசனுக்கு இன்னொரு முகமூடி தர அத்தனை பிரயத்தனப்பட்டது நன்றாகவே இல்லை. மேலும் ஒரு தனிப்பட்ட மனிதரை அத்தனை பேர் முன்னிலையிலும் இத்தனை கேள்விகளை கேட்டதும், அதற்கு பொருத்தமான ஏளன சிரிப்புக்களை சரியாக எடிட் செய்து அந்த இடத்தில் காட்டியதும் அந்த நிகழ்ச்சி மீதான் மரியாதையை குறைத்தது.

பிரபலமாக ஒருத்தர் தன் காசை செலவழித்து சிலருக்கு நன்மை செய்கிறார், அதில் அவருக்குத்தான் லாபமும், நட்டமும் ஏற்பட போகுதே தவிர நமக்கு அவரை கிண்டல் செய்து பொழுது போக்குவது மட்டும் தான் மிச்சம்.

எல்லாருமே குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்ற வார்த்தையை வாழ் நாளில் ஒரு முறையாவது சொல்லியிருப்போம். ஆனால் அப்பொழுது எல்லாரையும் போலி கௌரவத்திற்காக தான் நீங்கள் இந்த வார்த்தையை சொல்கிறீர்கள் என சொல்ல முடியுமா?? அதை வந்திருந்த எழுத்தாளரும் முழுமையாக ஆட்சேபித்தார்.

 இதையே கமல், ரஜினி, விஜய் நற்பணி மன்றங்கள் சேவை செய்கையிலோ இந்த நீயா நானாவில் ஒரு முறையாவது அதை எதிர்த்து இருக்கிறார்களா? சூர்யா ஒரு நடிகராக தன்னை முன்னிருத்தி ஆரம்பித்த அகரம் அறக்கட்டளைக்கு அவ்வளவு விளம்பரம் கொடுத்த விஜய் தொலைக்காட்சி, நீங்கள் சாதாரண மனிதராக இருந்து தான் இச்செயலை செய்ய வேண்டும், ஒரு நடிகராக போலி கௌரவத்திற்காக இதை செய்ய கூடாது என சொல்லவில்லையே.. தான் பிரபலமாகிய பின் சேவைகள் செய்தால் அது உடனே மக்களுக்கு சென்று சேரும் என சீனிவாசன் சொல்லியிருக்கிறார், அவருக்கு சந்தர்ப்பம் தான் தந்து பார்க்கலாமே.. அப்படி செய்ய வில்லையெனில் பின் இவர்கள் கேள்வி கேட்கட்டும், ஒரு தனி மனிதன் ஒரு அடியை முன் வைக்கும் முன்னே அவரை இப்படி அசிங்கப்படுத்தியது ஊருக்கு இளைத்தவனை கோமாளியாக்கி பார்த்த கதையாகத்தான் தோன்றியது.."

Friday, 25 May 2012வாழ்க்கையின் மற்றொரு விளிம்பு எவ்வளவு துயரங்கள் நிறைந்தது என அன்று அறிய முடிந்தது. ஒரு பெண் தாய்மையடைகிறாள், அந்த கரு பெண்ணென அறியப்படுகிறது, அந்த கருவினை சுமந்த கருப்பை அலம்பப்படுகிறது, அப்பெண்ணுக்கு தெரியாமலே.. ஒரு முறை இருமுறை அல்ல, தொடர்ச்சியாக 6 வருடத்தில் 8 முறை. பெண் குழந்தையை பெற்று எடுத்ததால் அந்த பெண் வீட்டைவிட்டு துரத்தப்படுகிறாள்,அவள் குழந்தையையும் போராடித்தான் சட்டப்படி மீட்கிறாள்.

மற்றொரு பெண், பெண் மகவை பெற்றெடுத்ததால் முகம் முழுதும் அவள் கணவனால் கடிக்கப்பட்டு கோரமாக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். தமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் தான் இத்தகைய வன்முறைகள் நிகழ்கிறது எனப் பார்த்தால் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் மறைமுகமாக நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

கோடிக்கணக்கான நீர்த்திவலைகளில் ஒற்றைத்துளி முத்தென சிப்பிக்குள் உருவெடுத்தால்,அதனை கொண்டாடி மகிழ்வோம் நாம். இப்படி சிதைத்து பார்க்கும் மன நிலை சிலருக்கு வாய்த்து விடுகிறது.. பொதுவாகவே வரதட்சினைக்காகவும், சொத்துக்கள் வெளியில் சென்று விடக்கூடாதென்ற காரணத்துக்காகவும் தான் இது போன்ற பெண் சிசு கொலைகள் நடக்கிறது, ஆனால் இதில் தன் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்க தெரியாத பெண்களும் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்.எழுத்தாளர் சுஜாதா சொன்னதைப்போல் இன்னமும் நம் பெண்களின் நிலை கணவன் வாங்கி கொடுப்பதை சமைப்பதையும், அவன் வருமானத்திற்குள் குடுமபம் நடத்துவதோடு அவனின் கருவினை சுமக்கவும், முழுதாக பெற்றெடுக்கவும், இல்லை பாதியில் கருக்கலைப்பு செய்வதையும் தங்கள் கடமையாக கொள்கின்றனர். நாமும் நமக்கு நடக்கும் வரை இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு நம் பொழுது போக்குகளில் மூழ்கி விடுகிறோம்.பல மேல் தட்டு மக்களிடமும் கவுரவ கொலையாக சிசுக்கொலை செய்யப்படுகிறது. இதனை ஆணித்தரமாக முன் வைத்து சத்யமேவ ஜயதே நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.. ஆனால் இந்த நிகழ்ச்சியையும் ஏதோ டாக்குமெண்டரி திரைப்படம் போல் நம் மக்கள் நினைத்து சேனல் மாற்றுவது தான் எங்கெங்கிலும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது..


இந்த நிகழ்ச்சி பற்றி என் தோழி கங்கா எழுதியுள்ள பதிவை இங்கு கொடுப்பதில் பெருமிதப்படுகிறேன். இனி ஒரு விதி செய்ய முற்படுவோமா???


எல்லோரையும் மயக்கும் குளிர்ச்சியான பின் மாலை மாலைப்பொழுது அது, இனிமைகளை குத்தகை எடுத்த அழகான, மிதமான பொழுதும் கூட.. துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு பயணித்துக்கொண்டிருந்தேன்.

என்னுடன் பயணித்தவர்கள் அந்த கால நிலையையும், அதன் அழகையும் தங்கள் கண்களில் பருகி, உதடுகளில் புன்னகையாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஏனோ என் மனம் அதில் லயிக்காமல், ஒரு வித பயம், பதட்டம், சந்தோஷம் என உணர்ச்சிகளின் கலவையாக குழம்பிக்கொண்டிருந்தது. ஏனென்றால் என் சகோதரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அன்று அதிகாலையில் அனுமதிக்கபட்டிருந்தாள். பத்து மாத காத்திருப்பின் பலனாக தேவதையவள் சுக பிரசவத்தில் வீடு வந்தாள். நாங்கள் மொத்தம் பன்னிரண்டு பேத்திகள் எங்கள் குடும்பத்தில், ஒவ்வொருவரையும் தேவதையாகவே கொண்டாடினார்கள் எங்கள் வீட்டில். ஆனாலும் ஒரு மூலையில் சமூகத்திற்காக, பெரியவர்களின் திருப்த்திக்காக சித்தி, அத்தைகள் எப்போதாவது ஆண் வாரிசிற்காக வேண்டிக் கொண்டுதானிருந்தார்கள்.

என் அக்காவின் குட்டி தேவதைக்கு எங்கள் வீட்டிலிருந்த வரவேற்ப்பு அவளின் வீட்டிலில்லை, அத்தை (அக்காவின் மாமியார்) இவர்கள் வீடு நுழையும் போதே தலையில் அடித்து கொண்டார்களாம். அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் வரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அக்கா வார்த்தைகளால் குத்தப்பட்டு கொண்டுதானிருந்தாள். திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இவர்களின் குழந்தை நச்சரிப்பு ஆரம்பித்து விடுகிறது, அப்படியும் ஒரு குழந்தை பிறந்தால் ஆணாக தான் பிறக்க வேண்டும் பலருக்கு, இல்லையேல் அதின் பின் விளைவுகளை தாயும், அச்சிறு பெண் குழந்தையுமே சந்திக்க நேரும். எத்தனை கொடுமை இல்லையா???

இந்நேரம் நீங்கள் நான் எழுதபோகும் விஷயத்தை ஊகித்திருந்தால் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியில் அமீர் கானின் சத்யமேவ ஜெயதேவை காண நேரிட்டது. இன்று நம்மில் பலர் குறைந்து விட்டதாக நினைக்கும் பெண் சிசு கொலை இன்னும் நடைமுறையில் இருந்து கொண்டுதானிருக்கிறது. அதுவும் படித்த, மேல் தட்டு மக்களிடமும் இம்மனநிலைமை அதிகமாக காணப்படுவது தன் உட்ச்சகட்ட வேதனை.

பெண்களை தெய்வங்களாக மதிக்கும் பாரத நாட்டை, பாரத மாதா எனவே விளிக்கிறோம். துர்கா, மீனாட்சி, கருமாரி, பண்ணாரி, சீதா தேவி என பல பெயரிட்டு வணங்குகின்றோம்.ஆனால் குலம் செழிக்க ஆணே வேண்டும். ஆண் இறுதி காரியத்தை செய்தால் மட்டுமே முக்தி கிட்டுமாம்.

நிகழ்ச்சியில் உதரணமாக காட்டியவர்களில் படித்தவர்களே அதிகம். அதுவும் ஒரு மருத்துவர் பெண் குழந்தைகளை (இரட்டையர்) பிரசவித்ததற்காக கொடுமைபடுத்தபட்டிருக்கிறார். அவரின் கணவரும் மருத்துவரே, மாமியார் பல்கலைகழகத்தில் பணி புரிபவர். எனக்கு எப்போதும் ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் இவர்கள் எல்லாம் எப்படி மாணவர்களுக்கு வாழ்க்கையை கற்பிப்பார்கள். ஒரு மாதம் கூட ஆகாத அச்சிறுகுழந்தையை இரண்டாவது மாடிப்படியில் இருந்து எட்டி உதைத்திருக்கிறார். உயிர் தப்பியது அக்குழந்தையின் தாய் செய்த புண்ணியமே. அந்த மாமியாருக்கும் இரண்டு பெண்கள் உண்டு.

அடுத்த பெண் குழந்தையின் தாய்க்கு பலமுறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் அவரின் அனுமதி இல்லாமலேயே செய்யபட்டிருக்கிறது. காரணம் வயிற்றில் உள்ள சிசு பெண் என்பதால்.
இவை எல்லாவற்றையும் விட உச்சகட்ட அதிர்ச்சி உண்டானது, கணவரால் முகம் கடித்து கொடூரமாக்கபட்ட பெண்ணை கண்டபோது தான். அவரின் முகம் நமக்கு கண்ணீரை வரவழைக்கும். அவரின் முகத்தை கடித்தே உருகுலைத்திருக்கிறார், எத்தனை கொடுமை??


முதலில் பேசிய பெண் கூறியது என்னவென்றால் இவை எல்லாவற்றிக்கும் காரணகர்த்தாக்கள் மருத்துவர்களே. இது வரை ஒரு மருத்துவர் கூட பெண் சிசு கருகலைப்புக்காக சிறை செல்லவில்லை, உரிமையும்(லைசென்ஸ்) ரத்து செய்ய படவில்லை. ஆனால் இது வரை மூன்று கோடி பெண் சிசு கொலைகள் நடந்திருக்கிறது. பத்திரிக்கையாளர் இருவர் கேமரா உடன் சென்ற போதும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாது ஐந்து மாத கருவை கலைத்து விடலாம் என கூறுகிறார்கள் மருத்துவர்கள். அவ்வாறு வீடியோ எடுத்த பின்னும் சட்டம் அவர்களை எதுவும் செய்யவில்லை.


நீதிபதி, தீர்ப்பு எழுதி, தண்டனை கொடுக்க வேண்டியவரே ஆண் குழந்தை தான் குலதீபம். இதற்காக ஏன் இவர்களை(கொடுமைபடுத்தப்பட்ட பெண்ணின் மாமியார், கணவர், மற்றும் குடும்பம்) கைது செய்து கொண்டுவந்தீர்கள் என வக்கீலிடம் கேட்டுள்ளார். இந்த கொடுமையை எங்கு பொய் சொல்வது???


ஆய்வுகளின் படி இதில் அனைவரும் அடக்கம், மருத்துவர், ஐ.ஏ.எஸ் ஆபீசர், ஹெல்த் டிபார்ட்மென்ட் உட்பட. ஒரு பக்கம் ஹரியானாவில் 35 வயதான ஆண்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். ராஜஸ்தானில் பெண்கள் பிற மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு பொருளாகவே கருதபடுகிறார்கள். உபயோகிக்க மட்டுமே, மதிப்பு மரியாதை எதையும் எதிர்பார்க்க முடியாது.

விரைவில் இந்நிலைமை பல மாநிலங்களில் பரவக்கூடும், நம் தொட்டில் குழந்தை திட்டம் நமக்கு சிறுதளவு உதவ கூடும். இதனால் நம் மரியாதை கூடும் என தோழி ஒருவர் கூறினார். ஆனால் உண்மை அது அல்ல. கொடூரமான உண்மை என்னவெனில், பெண்கள் இனி பொருளாக விற்கப்படலாம். ஒரு பெண்ணை இரு ஆண்கள் மணக்க நேரிடலாம் . இதற்க்காகவே ஒரு கும்பல் கிளம்பி பெண்களை கடத்தி விற்க நேரிடலாம். இவை எல்லாம் நடக்க கூடியவை மட்டுமே.


இதை தடுக்ககூடிய மந்திரகோல் நம்மிடம், நம் ஒவ்வொருவரிடமும் தான் உள்ளது. இவ்வாறான நிகழ்ச்சிகளை காணும் போதும், கேட்கும் போதும், படிக்கும் போதும் உணர்ச்சிவசபடுவதோடு மட்டும் அல்லாது நடைமுறையில் செயல் படுத்த வேண்டும். உங்கள் கண்முன் எங்கேனும் பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்தால், முடிந்த வரை எடுத்து கூறி தடுத்து நிறுத்துங்கள். அப்படியும் முடியாவிட்டால் போலீஸ் உதவியை நாடலாம். எதேனும் மருத்துவர் இக்காரியங்களை செய்கிறார் என்றால் தயங்காமல் அவர்மேல் கம்ப்ளைன்ட் செய்யுங்கள். அப்படி உங்களின் சூழ்நிலை செய்யவிடாமல் தடுத்தாலும் உங்களுக்கு தெரிந்த துணிச்சலான உறவினரோ, தோழியிடமோ கூறி தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுங்கள். போதும்..இது போதும் இனியும் நம் சகோதரிகள் கொல்லப்படக்கூடாது, நம் தாய்மார்கள் கண்ணீரிலும் குற்ற உணர்ச்சியிலும் தவிக்க கூடாது. பெண்ணால் முடியாதது ஏதும் இல்லை பெண்ணே. வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்.

- Ganga

Wednesday, 2 May 2012


சொல்லத்துணியாத
வார்த்தைகளின் சேகரிப்புக்கள்
மௌனங்களாக உன்னிடம்
வந்து சேர்ந்தும்
ஒலிகளின் மயக்கத்திற்காய்
காத்திருக்கிறாய்.