Pages

Thursday 15 September 2011

நீயே நானாக

மனதின் ஓரங்கள்
கூர் தீட்டிய கத்தியாய்
நீட்டியிருந்தும்
உன் நினைவுகள்
காயப்படுத்துகின்றன
என்னை...

விரல் கோர்த்தும் 
விலகி செல்கின்றன
ஓர் புள்ளியாய்
இணைந்த நம் 
எண்ணங்கள்...

இறகுகள் உதிர்ந்தது
சருகாய் போகின்றன
நமக்கான
கற்பனைகள்...



Saturday 10 September 2011

பாரதி

பெருங்கவியின் நினைவு நாள் இன்று...

முண்டாசு கவிஞன் தன் மூச்சுக்காற்றை இந்த இந்திய மண்ணில் விட்டு சென்ற நாள்..

தன் கவிதை என்னும் சாட்டையடியால் தூங்கி கொண்டிருந்த தமிழனை தட்டி எழுப்பிய
தன்மானமிக்க தமிழ்கவிக்கு வருடம் இரண்டு நாள் மட்டுமே தம் அஞ்சலியை செலுத்தும் நம் மக்களை என்னென்று சொல்வது ...

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தையே அழிக்க சொன்ன மாபெரும் தலைவன்...

உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் அச்சமில்லை அச்சமில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி வெள்ளையனின் நரம்பை கூட பயமுறுத்தி பார்த்த மாபெரும் வீரன்....

காலனே நீ வந்தால் காலால் எட்டி உதைப்பேன் என்று கர்ஜித்த கவிஞன்...


ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று சுதந்திரம் கிடைக்கு முன்பே ஆடிப்பாடி சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த கலைஞன்...

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்று வேதனையில் வெந்த மனிதன்....

வெறுங்கதைகள் பேசி வேடிக்கை மனிதனை போல் வீழ்வேனென்று நினைத்தாயா என்று கொக்கரித்த கவிஞன்...

கூழை கும்பிடு போட்டு வெள்ளையனுக்கு துணை நின்ற வெட்கம்கெட்டவர்களை பார்த்து நெஞ்சு பொறுக்குதில்லையே என்று புலம்பிய புலவன்...

ஆதி அந்தமான இறைவனை சின்ன சிறு பிள்ளையாக்கி தாலாட்டு பாடிய தாயுமானவன்...

எமக்கு தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல் என்று இறுமாப்புடன் ஆங்கிலேய நீதிபதிகள் முன் சொன்ன சுதந்திர போராட்ட வீரன்....

சிந்து நதியில் சேர நாட்டு பெண்களுடன் , சுந்தர தெலுங்கில் பாட்டிசைத்து, வங்க தந்தங்களை பண்ட மாற்று செய்து, இலங்கைக்கு சேதுவை மீண்டும் கட்டி வீதி செய்வொம், நாட்டில் உள்ள நதிகளை ஒன்றினைத்து எங்கள் நாட்டை வல்லரசாக்குவோம் என்று கனவு கண்ட பொதுனலவாதி...

கல்வி சாலைகள் வைப்போம், ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம் , உண்மைகள் சொல்வோம், பல வன்மைகள் செய்வோம்....

ஒப்பிலாத சமுதாயம் உருவாக உண்டி சுருக்கி பாட்டினை படைத்த தன்னலமற்ற தலைவனை இனி வரும் தலைமுறைக்கும் எடுத்தியம்புவோம்...

இரு நாளல்ல ஒவ்வொரு நாளும் இப்பெருங்கவியை போற்றி வணங்குவோம்.....

Friday 26 August 2011

புகைவண்டி











கொலுசு சத்தம்

தாளம் தவறாமல்

தடதடத்து தாலாட்டி

தண்டவாள பாதையில்

இடறி விடாமல்

இழுத்து போவாய்

உன் பெட்டிப் பிள்ளைகளை..





காட்சிகள்

கண்ணாமூச்சிக் காமிக்கும்

உன்னில் பயணிக்கையில்





தென்றலுடன்

சில சமயம்

கதைப்பேசிக் கொள்வேன்





உன் தாளத்துக்காண

வார்த்தைகள்

தேடி திரிவதிலேயே

பயணம் முடிந்துவிடும்...





தூக்கம் கலைந்த

கடுப்புடன் மேல்

விழுந்து ஓடும்

சில மனித இயந்திரங்களை

நொந்துக்கொண்டு

தாய் மடி சுகத்தினை

என்னைப்போல் ஒருவனுக்காய்

விட்டுக்கொடுத்து விடைபெறுகிறேன் நான்...

நீயே நானாக






விரல் பிடித்து

நடக்கையில்

உன் நரம்புகளின்

ரத்த அதிர்வுகளில்

கூட என் இதய

துடிப்பினை உணர்கிறேன்....




கனவுகளின் கலைதல்கள்

பெரும்பாலும்

உன் நெஞ்சின்

கதகதப்பிலே

கழியும்...




நீயில்லாத நாட்களின்

நீட்சியை குறைக்க

நீயே நானாக

நிறைந்து நிம்மதி கொள்கிறேன்...

Friday 19 August 2011

கனவு








நெடுநாளாய் எனக்கு

ஒரு கனவு வரும்

ஒரு பாதையின் எதிர்பாரா

திருப்பத்தில் ஒரு தேவதை

பூங்கொத்தை வைத்துக்கொண்டிருப்பது போல்..




வழக்கமாய் போய்விட்டதால்

பெரிதாய் எடுத்து கொள்வதில்லை..

நேற்று உன்னை பார்த்த பின்

தான் தெரிந்தது வந்தது ஒரு

காதல் தேவதை என்று...




உலகில் படைக்கப்பட்ட

காதலை எல்லாம்

உன் கையில் கொடுத்தனுப்ப

காத்திருந்தது என்று...




ஒரு பூவையேனும்

என்னிடம் கொடுத்திருக்கலாம்

என் கனவின் வழியே உன்னை

சந்திக்க தெரிந்த தேவதைக்கு

என்னை சந்திக்க

மனமில்லாமல் போனதற்க்கு

காரணம் என்னவாயிருக்கும்..




காத்திருக்கிறேன் கனவு காண

தயவு செய்து என்னை

தொந்தரவு செய்யாதே

கனவில் என் காதலா.....

Thursday 18 August 2011

வெறுமை


உச்சி வெயிலில் 
வெற்றுடம்புடன் 
மருள் பார்வையில் 
மயங்கி புடவையின் 
நுனி பற்றி இழுத்தும் 
கவனம் கார் கண்ணாடியிலும்
சிக்னல் விளக்கிலும் ...

கைசேர்த்த காசுகள் 
ஒரு பாலாடை பாலுடன் 
சிறிது மதுவும் ஊற்றி 
மயக்கத்தை உறுதிபடுத்தி 
வாகன ஊர்வலத்தில் 
இடைசெருகி 

மாலை நேர 
கணக்கு முடித்து 
கமிஷன் வாங்கி 
சேயை அதன் தாயிடம் 
சேர்க்கையில் கண்ணில் 
நிழலாடியது தன்னை 
விற்றுப்போன  
தாயின் முகம் .....

Wednesday 17 August 2011

அவள்


சில்லென்ற காற்று என்னை மோதி சென்றபோது கிட்டத்தட்ட வீடிருக்கும் வீதிக்கு வந்து விட்டேன் . உறுதியாய் எனக்கு தெரியும் இன்று அவள் என்னை பார்க்க வருவாள் என்று.



கவலை மறந்து ஒரு சிறிய சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்த என்னை வித்தியாசமாக தான் பார்த்தார் என் அம்மா.. எனக்கு பிடித்த பாடல் வானொலியில் ஒலிக்க சிறு துள்ளலுடன் ஓடி சென்று புத்துணர்வு பெற்றேன் ... சரியாக சொல்லவேண்டுமெனில் என் பிறந்த நாளில் தான் அவளை சந்தித்தேன் எனக்கு விவரம் தெரிந்து, என் வாழ்வின் முக்கிய தினங்களில் அவள் கண்டிப்பாய் வருகை தருவாள்.அவள் வந்த நாளில் நான் தவறாமல் கவிதை எழுதியிருப்பேன் .



அவள் வருகைக்காக காத்திருப்பதும் காத்திருந்து ஏமாறுவதும் சில நாள் .. நம்பிக்கையோடு காத்திருக்கும்போது ஏமாற்றாமல் வந்தும் விடுவாள் சில நாள்..



ஏமாந்த நாட்களில் இருக்கட்டும் எப்படியும் என் வாயிற்படியை மிதித்து தானே ஆக வேண்டும் என்று இருமாந்திருப்பேன், அவள் வருகைக்கான முன்னறிவிப்புகள் வரத்தொடங்கியதும் கோபங்கள் காற்றிலே போகும் .



சிறிது காலமாய் அவள் முக்கியமாக படவில்லை என்னுள் புதியதாய் மலர்ந்த காதலினால், சில நாட்களாக நான் அவளை ஏமாற்ற தொடங்கியிருந்தேன் , அவளை பற்றி நினைப்பதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை...அதனாலோ என்னவோ அவள் வருகையை நிறுத்திவிட்டாள்...



இரண்டு மூன்று நாட்களாக என் காதல் துணையுடன் ஏற்பட்ட பிணக்கினால் நான் மீண்டும் அவளை நினைக்க ஆரம்பித்தேன் , அவளை தவிர யாரிடம் பகிர்ந்து கொள்ளமுடியும் என் துக்கத்தை....



எனக்கே வெட்கமாயிருந்தது அவளை நினைத்து பார்க்கவும் அவள் வருகைக்காக எதிர்பார்ப்பதற்கும், என்ன செய்வது அவளிடம் மானசீக மன்னிப்பு கேட்கிறேன் ....இன்று எல்லாவற்றையும் விட அவள் முக்கியமாக படுகிறாள் ...



அவள் வருகைக்கான அறிகுறிகள் மாலையில் தென்பட ஆரம்பித்ததுமே அவள் என்னை மன்னித்து விட்டாள் என்று பெருமகிழ்ச்சி கொண்டேன் ...



ஏமாற்றி விடுவாளோ என் மேல் உள்ள கோபத்தால்... ம் ...மேகம் தன் நிறத்தை காட்டி கண்ணனை வம்பிழுக்க ஆரம்பிக்கிறது..என் கண்கள் நீர் விட காத்திருக்கிறது ...



என் கைத்தலம் பற்றி ஓர் முத்துதிர்த்தாள், என் கண்ணீரும் அவளும் ஒன்றாய் சேர்ந்ததில் என் துன்பம் கரைவதை காண்கிறேன்,பாசத்தோடு என்னை நனைக்கிறாள் என் மழை தோழி.... என்னை ஏமாற்றாமல் ...

Tuesday 16 August 2011

நீயில்லாமல் ..



இருளை ஓளியால்

மறைக்கும் மெழுகுவர்த்தி

போல் நீயில்லாத

நாட்களை

உன் நினைவுகளால்

மறைக்கிறேன்




நேரம் கூட

கணக்கிறது

நீயில்லாத

நாட்களில்




ரயில் நிலையத்தில்

நீ எதிரில் வரும் போது

வரும் கண்ணீரை

நீயறிய கூடாதென

கண்களால் விழுங்குகிறேன்...

Wednesday 10 August 2011

தேடல்



வேரூன்ற தேடி
திரிகையில்
நழுவுகிறேன்
பிடிமானத்தில்
மண்புழுக்கூட்டம்...




****************

இன்றைய
நம்பிக்கையின்
மிச்சம்
நாளை....




****************

Tuesday 2 August 2011

நீயே நானாக



எதிரில் நீ வருகிறாய்
என் மனதை விட்டு
காட்சிப்பிழை ...








பிரபஞ்ச பெருவெளி
சிறிதுதான் உன்
நினைவுகளை விட ...













கண்ணீர் திவலை
தேடி பயணம்
உன் நினைவுகள்








Saturday 30 July 2011

நீயே நானாக

நிரப்பி கொள்கிறேன் 
ரத்த நாளங்களுக்குள் 
பிரபஞ்சம் முழுதுமாய் 
நீ வியாபித்திருக்க ....
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜீவித்திருப்பதும்
மரணித்திருப்பதும் 
தொடர்ச்சியாய்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன
நீ வந்து செல்வதால் ....
~~~~~~~~~~~~~~~~~~~~~~

இமைகள் துடிப்பதும் 
இதயம் துடிப்பதும் 
இடைஞ்சலாய் - 
கனவுக்குள் நீ .....

~~~~~~~~~~~~~~~~~~~~~~

உனக்கு பிடித்த பாடல் 
ஒலிக்கையில் 
உன்னை மறக்கிறேன் 
நீயே நானாகிறேன் .....

Wednesday 27 July 2011

நீயே நானாக



உன் மூச்சில்
இசைக்கும் புல்லாங்குழல் நான்
உன் உயிர் மூச்சால்
மட்டும் இசைக்கப்படுவேன் ...

எங்கோ இருக்கிறாய் நீ
உன்னை சுற்றி
எங்கும் இருக்கிறேன் நான்
காற்றாக.....

எப்போதும் என்னை விட்டு
செல்கிறாய்
அப்போதும் நீயே
நானாகிறேன் ....

தூரத்தில் தனியாக
தென்னை
எங்கோ கேட்கும்
ஓர் ஒற்றை குயிலோசை
நானில்லாமல் நீ .... 

சிறகு விரித்தும்
பறக்க முடியவில்லை 
உன் நினைவுகள் 

நூலகத்திலும் 
இல்லை 
உன் விழி மொழி 
அகராதி 

உன் இருப்பிடத்தை
என் நுரையீரலுக்கு 
மாற்று நீ சுவாசிக்க

காதல்




விரும்பினாலும் 
விரும்பாவிட்டாலும் 
வந்தே தீரும் இந்நோய் 

காதல் வந்த பின் தான் 
இதயம் இருப்பது தெரியும் 
இயற்கை தெரியும் 
காண்பன ஆச்சரியமாகும் 

வானம் வளைந்து கொடுக்கும்
வர்ணமும் கொடுக்கும் 
கவிதை எழுதி பறக்கவிட

தாயின் கண் நோக்காமல்
தந்தை குரல் கேளாமல் 
விழி விரிய மனதுக்குள் 
பேசுவோம் யாருமில்லாமல் 

சேர்த்து வைத்த 
பொக்கிஷங்கள் தேவையற்று 
போகும் , காதல் பரிசுகள் 
விலைமதிப்பில்லாததாகும் 

யாரும் சொல்லிக்கொடுக்காமலே   
கண் மொழி 
பரிச்சயமாகும் 

பாரதியும், புதினங்களும் 
பரணுக்குப்போவர் 
தபூவும் , பா. விஜயும் 
தெய்வமாவார்கள் 

தமிழ் அழகாகும் 
உவமைகளும், உருவகங்களும்  
மனனம் செய்யாமலே 
சரளமாய் வரும் 

நடந்து தேயும் வீதிகள் 
தேடி போய் நலம் விசாரிப்போம் 
காதலரின் வீட்டருகில் இருக்கும் 
தூரத்து சொந்த பாட்டியை

விண்மீன்கள் ஒன்றுக்கூடி 
அவள்/அவன் முகமாய் 
காட்சியளிக்கும் 

தூக்கம் விடுமுறை 
எடுத்து செல்லும் 
கனவுகள் குத்தகை 
எடுக்கும் பகலில் கூட 

காலம் சேர்த்துவைத்தால் 
சொர்க்கம் 
இல்லையேல் 
வாழும் வரை நரகம் 

சுவடரியாமல் வரும்,
தழும்புகள் உண்டாக்கி போகும். 
காதலித்து பாருங்கள் 
சுயம் புரியும் 

Wednesday 20 July 2011

மனித வாழ்க்கை

விட்டில் பூச்சியாய்
தினம் தினம்
விழுந்தும் வீழ்ந்தும்
எழுகிறோம்

பீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழ ஆசைபட்டாலும்
முயற்சியை
புதைத்தழிக்கிறோம்

உணர்ச்சிக்குவியலாய்
உடலை உணர்ந்தாலும்
உறைந்த உள்ளத்தால்
உரைக்க மறக்கிறோம்

இயந்திர வாழ்க்கையில்
இயல்புகளை மறைத்து
எதையோ தேடி
அலைகிறோம்

நிம்மதி விற்று
கவலை வாங்கி
மடி நிறைக்கிறோம்

ஐந்தறிவு விலங்கும்
அழகாய் வாழ்ந்து
போகிறது விதிக்கப்பட்டவரை

விதியை நொந்து
இருக்கும் வாழ்க்கை
தொலைத்து புலம்பும்
மனிதா வா .............




நம்பிக்கை எனும்
அச்சாணி கொண்டு
வாழ்க்கை நிலம் உழுது
மனிதம் பயிரிட்டு
உலகம் காப்போம்

Sunday 26 June 2011

காதல் கணவா ...




காலை கண்விழிப்பு
காபியுடன் நாளிதழ்
அலுவலக ஆயத்தங்களுக்கு
அரக்க பறக்க
ஒத்திசைந்து
சிற்றுண்டியுடன் சிரிப்பு கலந்து
பரிமாறி உன் முகம் நோக்கியே
இருப்பேன் தவறாமல்

தவறிப்போய்கூட
என் முகம் நோக்க மாட்டாய்
நீ - ஆனால் வழக்கம்போல்
உச்சி முகர்ந்து
டாட்டா காண்பித்து மறைவாய்

உன் சட்டை வாசனை
கலைந்திருக்கும் போர்வை
படித்த நாளிதழ்
சாப்பிட்ட தட்டு
இவை எல்லாமே உன்னை
ஒரு நொடிகூட மறக்க விடாது

நீயும் என்னை நினைத்து கொண்டிருப்பாய்
என்ற ஞாபகத்தில் ஓடி சென்று எடுப்பேன்
உன் செல்பேசியின் ஒலிகுரல் கேட்டு
நீயோ சாப்பிடவரமாட்டேன்
என்று ஒற்றை வார்த்தையில் வைப்பாய்

நாம் பேசி மகிழ்ந்த
கணங்கள் மட்டுமே எனக்கு துணையாய்
நாளை கழிப்பேன் நீ வரும்வரை

வழக்கம்போல் உடை மாற்ற ,
இரவு உணவு , தொலை காட்சி
எல்லாவற்றிர்க்கும் குரல் கொடுப்பாய்

சரி ஞாயிறு என்ற ஒரு நாள் உண்டே
நமக்காக என சமாதான படுத்திகொள்வேன்
ஞாயிறும் வரும் எனக்கு
ஞாயிறு உதிக்கும் உனக்கு
10 மணிக்கு

காலை வேலைகள் முடிந்ததும்
மடிகணினியில் மறப்பாய் உலகை
மறந்தும் மடி சாய மாட்டாய்
உலக கதைகள் பேச

கிரிக்கெட் ஸ்கோர்க்கு இடையில்
நான் சமைக்கும் சோறு
மதிய தூக்கம்
விடுமுறை விடைபெறும்

கனவு நாயகர்களை
எப்போதும் சிலாகிப்பாய்

கலவி முடிந்து கிடந்து பேசினால்
காதல் என்றார் உன் நிழல் நாயகன்
கலவியே காதலுடன்
செய் என்கிறேன் உன் நிஜ நாயகி

வேலையிடை வேலையாய்
என்னை காதலிப்பதையும்
ஒரு வேலையாய் கொள்
என் காதல் கணவா

Thursday 23 June 2011

ஓராயிரம் கனவுகள் 
ஆயிரமாயிரம் கற்பனைகள்
விவரிக்க முடியா
சிலிர்ப்பு என்
உடலெங்கும் ஓடும்


வெளித்தள்ளிய 

வயிற்றினை
பார்த்து பார்த்து
உவகை கொள்வேன்


ஒரு சிறு அசைவிலும்
மின்சாரம் பாயும்
எனக்குள்


ஆர்வங்களும் , ஆசைகளும்
ஒருசேர நிஜமாய்
மாறின ஓர் நாள்


சிறு ரோஜாவாய்
மொட்டவிழ்ந்து
எனனை புதிதாய்
மீண்டும் பிறக்க வைத்து
என் தந்தையும் தாயுமானாய்


அம்மா என்ற
அந்தஸ்தை தந்து
என் மனதில்
சூல்கொண்டாய் மீண்டும் ..