Pages

Saturday, 24 March 2012

விதைக்குள் விருட்சம்


கல்லெறியும் விசையில்
கலைந்துவிடும் குளத்தின்
தெளிவு போல்
சிதறிப்போகிறேன்
உன் வார்த்தைப்பிரயோகங்களின்
முன்..

கூழாங்கற்கள் சேகரிக்கும்
சிறுமியின் பொறுமையில்
நீ சிதறவிட்ட
ஒவ்வொரு தருணங்களையும்
சேகரித்து வைத்துக்கொள்கிறேன்
காலத்தின் இடைவெளிகளில்..

மகரந்தகளோடு ரகசியம்
பரிமாறிக்கொள்ளும் தேன்சிட்டின்
மொழிகளை உன்
விரல்களுக்கு கற்பிக்கிறேன்

நிலம் கீறி
மேலெழும் சிறுவிதை
ஒளித்திருக்கும் விருட்சம்போல்
உன் மௌனங்கள் தேக்கிவைத்திருக்கும்
பெருங்காதலை
வெளியிட…
http://www.atheetham.com/atheetham/?p=176
நம்முடன் ஒத்துப்போகும் ரசனைகளை வைத்து மதிப்பிடப்படும் ஒருவர் உண்மையில் ரசனை இல்லாதவராக இருக்க முடியாது. இரவு வான் ஒருவருக்கு நட்சத்திரங்களை ரசிக்க தரலாம், மற்றொருவருக்கு நிலவற்ற இருளை ரசிக்க தரலாம், அதற்காக அவர் ரசனையற்றவர் என ஒதுக்க முடியாது. பொதுவாக ஒரு பிரபலத்திற்கோ அல்லது நாம் பெரிதும் மதிக்கும் ஒருவருக்கு பிடித்த ரசனைகளே நமக்கும் ரசித்து பார்க்கலாம் என தோன்றுகிறது, அதிசயமாய் நாம் ரசிக்கும் ஒரு சிறு விஷயத்தை வெளி சொல்வதற்கு கூட நாம் தயங்குகிறோம் என்பதே உண்மை.பலர் சொல்லும் ரசிப்புக்களையே நாமும் நமக்கானது என்று நினைத்துக்கொண்டு உங்கள் கூட்டத்தில் நானுமிருக்கிறேன் என்று மட்டுமே சொல்ல ஆசைப்படுகிறோம். வெளிசொல்லாதவரை அந்த வட்டத்தில் இருந்து தள்ளிவைக்கவே விரும்புகிறோம். ஒவ்வொருவரும் எத்தனை வேலைகளுக்குமிடையிலும் ஏதேனும் ஒரு விஷயத்தை கண்டிப்பாக ரசித்திருப்பார்கள், ஆனால் அந்த கணமே மறந்துமிருப்பார்கள்.ரசனைகளை மனதில் வைத்து அந்த கணத்தை மீண்டும் மீண்டும் ரசிப்பவன் கவிஞனாகிறான்.மற்றவன் ரசிகனாகிறான். ரசனைகள் மாறினாலும் ரசிப்பவர் இருக்கும்வரை உலகிலுள்ள அனைத்தும் அழகுதான்.அனைத்தும் ரசனைகள் தான்..

Monday, 12 March 2012

நவீன விருட்சத்தில் வெளியாகியுள்ள என் கவிதைகள்

பெயரிழந்த பறவை
பெயர் கொத்திப்பறந்த ஏதோ ஒன்று
மரத்தின் உச்சியில்
அமர்ந்து உற்று
நோக்கிக்கொண்டிருக்கிறது
என்னை..


தேகமெங்கிலும் அந்நிய வாசனையோடு
சுயத்தை இழந்துக்கொண்டு
நான்..

உயிர் திருகும் வலியில் என்
உணர்வுகளை கடத்திக்கொள்கிறது
அதனுள்..

பெயரிழந்த பறவையாகிறேன் நான்
குற்றத்தின் சுமையும் என்
சிறகின் மேல்..******************************************


சிதறல் துளி


உறங்கியும் உறங்காமலும்
இருக்கின்ற விடியலை
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கின்றன
உன் நினைவுகள்.

என் கனவு, நினைவு,
எல்லாமாகிப்போகின்றன
உன் விரலிருந்து கசிந்த
வார்த்தைகள்..

சுவாசமாய் உட்செல்லும்
காற்று தீர்மானமாய்
சொல்லும் உன் வார்த்தைகளின்
வெப்பத்தை..

உடலெங்கும் வழிந்தோடும்
குருதி மட்டுமே உணரும்
பிரியம் மேலிடுகிற
உன் ஒவ்வொரு ஸ்பரிசத்தின்
குளிர்ச்சியையும்.


உன் அளவிடமுடியா
பிரியத்தின் முன்
சிதறல் துளியாகிறேன்
நான்.


**********************************************யுகங்களின் தேவதைகளுக்கான
இலக்கணம் கண்ணீராலும், துன்பத்தாலும்
மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.


தேவதையென்றாலும், தாடகையென்றாலும்
பெண் பெண்ணாய்த்தானிருக்கிறாள்.


Wednesday, 7 March 2012

யுகங்களின் தேவதைகளுக்கான
இலக்கணம் கண்ணீராலும்,
துன்பத்தினாலும்
மட்டுமே வரையறுக்கப்படுகின்றன.

தேவதையென்றாலும் தாடகையென்றாலும்
பெண் பெண்ணாய் தானிருக்கிறாள்..

Sunday, 4 March 2012

திண்ணையில் வெளியாகியிருக்கும் என் கவிதையினை இன்று தான் பார்க்க நேர்ந்தது.. தொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது ..
உச்சி வெயிலில்
வெற்றுடம்புடன்
மருள் பார்வையில்
மயங்கி புடவையின்
நுனி பற்றி இழுத்தும்
கவனம் கார் கண்ணாடியிலும்
சிக்னல் விளக்கிலும் …
கைசேர்த்த காசுகள்
ஒரு பாலாடை பாலுடன்
சிறிது மதுவும் ஊற்றி
மயக்கத்தை உறுதிபடுத்தி
வாகன ஊர்வலத்தில்
இடைசெருகி
மாலை நேர
கணக்கு முடித்து
கமிஷன் வாங்கி
சேயை அதன் தாயிடம்
சேர்க்கையில் கண்ணில்
நிழலாடியது தன்னை
விற்றுப்போன
தாயின் முகம் …..
- இக்கவிதை கவிப்ரியா பானு என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.. ஆகஸ்ட் மாத இதழில்.. 

Saturday, 3 March 2012

அதீதம் இதழில் இரண்டு கவிதைகள் வெளியானதில் மகிழ்ந்துக்கொண்டிருக்கிறேன் நான்.. சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்த பின் கிடைத்த அங்கீகாரம்..தேனம்மை அக்காவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.. முகப்புத்தகத்தில் அவ்வப்போது பதியும் கவிதைகளை தாண்டி அடிக்கடி எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது இந்த அங்கீகாரம்.

http://atheetham.com/story/kavibhanu

இந்த இணைப்பில் கவிதைகளை காணலாம்..