Pages

Wednesday, 4 January 2012

எந்த சந்தோஷமுமற்ற ,எந்த வேதனையுமற்ற ஏகாந்தம் இனிது.. இனிது. இனிது.. சில நொடிகள் , சில நிமிடங்கள் நம் வாழ்க்கையில் கைவரப்பெற்றிருக்கும் இந்த ஏகாந்தம் அனுபவித்தறிந்தவர்களுக்கு இனிதே தான்..******************************************************************


தனக்கே தனக்கான எதிர்காலம் மற்றவர்களை நம்பி இருப்பதாக நினைப்பதில் தொடங்குகிறது முதல் ஏமாற்றம்.


*************************************************சில தவறுகளுக்கான விளக்கங்கள் சொல்லப்படாமலிருப்பதே பல வன்மங்கள் உருவாகாமல் இருக்க வழி.


**************************************************உன் நினைவுகளற்ற என் கனவுகளின் ஒரு மூலையில் கூட நானில்லை...


**************************************************வளையாத மூங்கில்கள் தனித்தே நிற்க வேண்டியிருக்கிறது.


*************************************************

சில நேரங்களில் இறுகக்கோர்த்தும் விரலிடுக்குகளில் நழுவி விடுகிறது பிரியம்..


**************************************************

மனதின் அடி ஆழ வெறுப்புக்கள் தன் முழு வன்மத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஏதோ ஒரு வார்த்தையினை நோக்கி காத்திருக்கிறது.


**************************************************மிதந்தலையும் காற்றினை குறுக்கியிழுத்து இசையும்
குழலிசைப்போல் உன் நினைவினை நிறுத்தி
சுவாசிக்கும் சுவாசமே முழுமை பெறுகிறது...


**********************************************ப்ரக்ஞையற்று சுற்றித்திரிகிறது காற்று
சூல் கொண்ட மேகங்களை கலைத்துவிட்டு


*****************************************

"நாட்கணக்கில்
மறைத்திருந்த உன் சுயம்
வெளிப்பட்ட கணம்
நீ நீயாகவும்
நான் நானாகவும்."

*****************************************

"
ஒவ்வொரு கவிதை
புனைதலிலும்
நேர்ந்து விடுகிறது
அடித்தல்
திருத்துதல்கள்.


கவிதையாக
இருப்பதினால் வலிகளை
வார்த்தைகளில்
அடக்கிகொண்டு விடுகிறது .."

*****************************************"இருத்தலுக்கும் இல்லாதிருத்தலுக்கும்
இடையில் நீ..."

*****************************************

"விலகிவிடுதலுக்கான
பிரயத்தனங்களாய் மௌனங்களை
மென்று கொண்டிருக்கிறேன்.."

****************************************

"இடம் வலமென
மழை சுழன்றாடிய பின்
ஏதுமற்றதாய் இருக்கிறது வானம்."

*****************************************

"துயரங்களை தோள் மாற்ற முயல்கையில் அவை நழுவி செல்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.."

****************************************

"காரணமற்ற
உன் அழுகைகளினால்
வரும் கோபங்கள்
உன் காகிதகப்பல்கள்
மூழ்கிவிடாதிருக்க
பதைப்பதைப்பதில்
காணாமல் போய்விடுகின்றன."


***********************************"ஒரே ஒரு கணத்தில் மாறக்கூடியவை தான் எல்லாம்..அந்த கணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது."


************************************"அவரவர் செய்கையில் அவரவருக்கான நியாயம் இருக்கத்தான் செய்கிறது..மறுக்க முடியாதபடி.."

************************************


பாரதியின் சொல்


ரௌத்ரம் பழகு

கோபம் ஒரு மோசமான விருந்தினர் ,ஆனால் அந்த விருந்தினரிடம் பழக சொல்லி ஒரு மாபெரும் கவி சொல்கிறாரென்றால் அதன் அர்த்தம் என்னவாயிருக்கும்...


ரௌத்ரம் பழகு என்பதனை மேலோட்டமாக பார்த்தால் கோபம் கொள்ளசொல்கிறார் என்று நினைப்போம், ஆனால் களவும் கற்று(கத்தும்) மற என்று சொல்வது போல் ரௌத்ரம் பழகிகொள் , தெரிந்து கொள் என்று தான் இங்கு பாரதி சொல்கிறார்..


பயனற்ற , இடம், பொருள் தெரியாமல் வெளிபடுத்தப்படும் கோபம் பயனற்று தான் போகும் , ஆனால் அதனை "அக்னி குஞ்சொன்று கண்டேன், அதனை அங்கே ஒரு பொந்திடை வைத்தேன் என்று தான் சொன்னது போல் ரௌத்ரம் அறிந்து உன் மனதில் வைத்து ஆக்கபூர்வமாக மாற்றி தேவையான நேரத்தில் வெளிபடுத்து என்பது தான் கவிஞனின் எண்ணம் ...


கண்ணம்மாவை (கண்ணனை ) உருகி உருகி பாடிய பாரதி சோம்பி திரியும் மனிதரையும், அடிமை சங்கிலியில் நம்மை பிணைத்து வைத்திருந்த வெள்ளையரையும் கேள்வி கேட்கும்போது தன் ரௌத்ரத்தை தன் கவிதையில் கொண்டு வந்திருந்ததை நாம் அறிவோம்...


தேவையான நேரத்தில் வெளிபடுத்தப்பட்ட ரௌத்ரம் தீப்பொறியாய் எரிந்து இந்தியர் அனைவரின் நெஞ்சுக்குள்ளும் வேள்வி தீயாய் கனன்றது... அந்த தீயின் வேகம் தாளாமல் வெந்து (வெள்ளையரின் ஆதிக்கம்) , தணிந்தது (விடுதலை).


ரௌத்ரம் பழகி கொள்வோம் நாமும் பெருங்கவியின் வார்த்தை படி ...