Pages

Monday, 27 February 2012

மின்வெட்டு

பண்பலையில் ராஜாவின் பாடல்கள்
நட்சத்திரப்புள்ளிகளில் இணைக்கும் ஓவியங்கள்
தலைக்கோதி மகனுக்கு கதைசொல்லல்
மொட்டைமாடி மென் நடை
கணினி அரட்டையில் மூழ்கிப்போகாத இரவு
புத்தக வாசனை நிறைந்த உறக்கம்
அலாரம் வைக்காமலே அதிகாலை விழிப்பு
மீட்டெடுத்த ரசனைகள்
அனைத்தும் காணாமல் போகின்றன
காலை அவசரத்தில் ஓடாத மிக்ஸியும்..
தண்ணீர் வராத குழாயும்..வேலை செய்யாத லிப்ட்டும்..
ஒரே நேரத்தில் நன்றி நவிலலும்,
வசைப்பொழிதலும் மின்வெட்டிற்கு..Friday, 24 February 2012


சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் வழியெங்கிலும் மரங்கள் கவிந்து இயற்கை அளித்த நிழற்குடையாய் சில்லென்று இருக்கும்.அடி மரத்தினைப்பார்க்கையில் பழமையான மரங்கள் என தோன்றும்.. (சிறு வயதில் மரங்களின் வயதைப்பற்றி தெரியாததால் மரம் பெரியதாக இருந்தால் அது வயதான மரம் என்பது என் அனுமானம்.).செங்கல்பட்டு தாண்டும் வரை என்று நினைக்கிறேன். பசுமைக்கு குறைவில்லாமல் அந்த சாலை முழுதும் வயல்களும், மரங்களும் நிறைந்திருக்கும். நகர வாழ்க்கையினை விரும்பி புலம்பெயர ஆரம்பித்த மக்கள் வசதிக்காய் சாலையை அகலப்படுத்த வேண்டி அந்த மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு இப்போது தகிக்கும் வெயில்தான் அந்த சாலையெங்கிலும்.. சமீபமாக திருச்சி - ராமேஸ்வரம் செல்கையிலும், முசிறி செல்லும் வழியிலும் பல ஆண்டுகளாய் இருந்த மரங்கள் அடியோடு சாய்க்கப்பட்டிருந்தன.. அதற்கு பிரதிபலனாய் எங்குமே சிறு செடிகள் கூட நடப்படவில்லை.. ஒரு சகோதரனிடம் நான் இது பற்றி அங்கலாய்க்கையில், மக்களின் சொகுசான வாழ்க்கைக்கான பலியிடுதல் இது, இதற்கு மீண்டும் மரங்கள் நட்டால் தீர்வாகாது என்று கூறினார்.. இங்கு சில நாட்களுக்கு முன்னரும் ஒர் நிலைத்தகவல் பதிந்திருந்தனர், மீண்டும் மரங்கள் நட்டால் ஏற்கனவே நட்ட மரங்களை வெட்டியதற்கு சமமாகி விடுமா என்று. இதே போல் நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் நாம் சிறு வயதில் அனுபவித்த அந்த இயற்கை சூழல் நமக்கு கிடைத்திருக்குமா என்று தோன்றியது, அதே சமயம் சகோதரர் சொல்லியதும் சரிதான், இப்போது நாம் நடப்போகும் மரங்கள் நாளை நம் பிள்ளைகளின் வசதிக்காக அழிக்கப்படுமென்று.. விடை சொல்பவர் யார்.... இல்லை மாத்தாய் போல் கடமையை செய்து கேள்வியில்லாமல் சென்று விடலாமா??


Tuesday, 21 February 2012

வாய் வழி அமிர்தமாய்
இறங்கி உடலெங்கும்
வழிந்தோடும் என் இனிய மதுரமே..
மதுரம் போன்ற என் தோழி கங்காவின் பதிவு இது.. அவளின் முதன் முயற்சி இது.. சகோதரிகளாக பிறந்திருக்க வேண்டிய நாங்கள் தோழிகளாகியிருக்கிறோம்.. என்னுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் ஆழமான , உண்மையான விமர்சனம் தந்து, சோம்பித்திரியும் என்னை செல்லமாக தட்டி(திட்டி) எழுத வைக்கும் மதுரத்தோழி அவள்.. இலக்கிய நடையில் இருக்கும் என் எழுத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கேலியும் கிண்டலுமான அவளின் எழுத்து நடை எனக்கு சில சமயங்களில் பொறாமையை தரும்.. அவளின் கன்னி முயற்சினை இங்கு பதிவிடுவதில் எனக்கு பெருமை..

குறுங்கட்டுரை .. வாழ்வில் ரசித்த பல நிமிடங்களை ரசிக்கும்படி தரும் அவளின் இந்த பதிவு எனக்கு மிகப்பிடிக்கும்.. குறைகள் சொல்ல வேண்டுமென்றால் சொல்வர் சிலர், ஆனால் குறைகளையும் நிறைகளாக பார்ப்பது தானே நட்பு..

இதோ அவள் பதிவு...


மழை நாளும் என் மனதிற்கினிய .......
அது ஒரு அந்திசாயும் பின்மாலை நேரம்.. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

நம்மூரின் மண்வாசனை,உடலையும் மனதையும் வருடி செல்லும் குளிர்ந்த காற்று,மரங்கள் தங்களுக்குள் சல சல என பேசிக்கொள்ளும் இனிய ஓசை, கூடு சேர விரைந்து செல்லும் பறவைகளின் இனிய நாதம்..

மழையின் வருகையை கட்டியம் கூறும் இவைகள் அனைத்தும் சேர்ந்து அம்மாலை வேளையை மிகவும் ரசிக்கத்தக்கதாக மாற்றிக்கொண்டிருந்தது.


ஏதோ ஒரு நிகழ்வு, 
இனம் புரியா உணர்வு, 
என்றோ தொலைத்த 
ஒரு உறவின் நினைவு ..

இவை அனைத்தின் சாரல்களும்,தூறல்களும் ஒவ்வொரு மழை நாளின் போதும் மறவாமல் என் இதயம் நனைக்கிறது.

மிதந்து வரும் 
மேகங்களில் ஓளிந்திருக்கும்
தோழி..

பூமித்தாய்மடியின்
சுகம் தேடி ஓடி 
வருகிறாள்..

மிக சிறிய தூறலாக ஆரம்பித்தது மழை..

கிளர்ந்து எழுந்த அம்மண்வாசனையோ ஒரு கை அள்ளி சாப்பிட மாட்டோமா என்ற ஏக்கத்தை கூட்டியது..மிக வேகமாக எழுந்து பால்கனியில் போய் அமர்ந்தேன்..சிலு சிலு என வீசிய தென்றல் மனதை கொள்ளை கொண்டது..முகத்தில் விழுந்த சாரல் மெய் மறக்க செய்தது..

"கங்கா... கங்கா..ஹே ..காதுல விழுதா இல்லையா".. வேற யாரு எங்க அக்கா தான்..அதானே நம்ம ஒரு நிமிஷம் உட்கார்ந்தா கூட பொறுக்காதே!!
"என்னக்கா வேணும் ???" என கேட்டதும் , " ஒரு கப் காபி கொடேன் ப்ளீஸ் ..நீ போடுற காப்பியே ஒரு தனி டேஸ்ட் தான்.." ஹூம்...இந்த ஐஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...

அசைந்தாடி எழுந்து கிச்சனில் நுழைந்தேன்..அடுப்பில் பாலை ஏற்றியதும் ஒரு சலனம் நமக்கும் ஒரு கப் சேர்த்து போட்டுடலாமா?? எப்படி பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கப் வராது,கூட தான் வரும்..கைபாட்டில் வேலை பார்க்க மனம் ஒரு புறம் காபி வேண்டுமா?? வேண்டாமா?? என தர்க்கம் செய்து கொண்டிருந்தது..

இதை எல்லாம் மீறி,என்னை சுற்றி உள்ளவை மறந்து மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது..

அட அது காபி பத்தி தாங்க....(நீங்க பெருசா எதிர் பார்த்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல, ஆமா சொல்லிட்டேன்)

வாய் வழி அமிர்தமாய்
இறங்கி உடலெங்கும்
வழிந்தோடும் என் இனிய மதுரமே

எனக்கும் காபிக்குமான அறிமுகம் எனது பதினாலு வயதில் ஆரம்பித்தது.அப்போது நான் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருந்தேன்...எனது எட்டு வயதிலிருந்தே காபி எனக்கு பரிச்சயம் தான் ஆனால் ஹாஸ்டலில் கொடுக்கப்படும் அந்த அமிர்த பானத்தை பருக என்றுமே எனக்கு விருப்பம் இருந்ததில்லை...

"தண்ணி வேணும்னா பைப்பில் பிடிச்சு குடித்தா..அதுக்கு ஏன் டைனிங் ஹாலுக்கு போற..ஹோ சுடு தண்ணி வேணுமா சரிபோத்தா"..எங்கள் ஹாஸ்டல் காபி குறித்து தோழிகள் அடிக்கும் கமெண்ட் இதுதான்..அவர்களின் இந்த கம்மென்ட்க்கு பயந்தோ..இல்லை எங்கே அதை குடித்தால் நம் காலையும் வாரிவிடுவார்கள் என்ற எண்ணத்திலோ...அதை குடிக்கும் துணிவு எனக்கு வந்ததில்லை..

இதே போல் ஒரு மழைநாளில் தான் எனக்கு காபி அறிமுகம் ஆனது..இதே எனது அக்காவின் கைவண்ணத்தில் தான்...ஒரு விடுமுறையில் வீடு வந்த போது என் அக்கா சித்தியிடம் "தலைவலிக்குது ஒரு காபி கொடுங்க சித்தி" என்று கேட்டு வாங்கிய காப்பியும்..."செல்ல செல்லம்மா(அது தாங்க அவங்க பேரு) சித்தி தானே..ஒரே ஒரு கப் ஹார்லிக்ஸ் கொடுங்க சித்தின்னு", நான் கேட்டு(ஐஸ் வச்சு) வாங்கிய ஹார்லிக்சும் எங்களை அறியாமல்,மழை சுவாரசியத்தில் இடம் மாறியது...

முதல் ஒரு சிப்பிலேயே எனக்கு அதன் மணமும்,சுவையும் பிடித்து போயின..எனக்கும் என் அக்காவும் அன்றிலிருந்து ஒத்து போன ஒரே விஷயம் அது மட்டும் தான்...அதற்கு பின் நான் காபி பைத்தியம் ஆனதற்கான முழு பொறுப்பும் என் அக்காவையே சேரும்(நம் தவறுகளுக்கு அடுத்தவர்களை கைநீட்டுவதில் என்றுமே ஒரு தனி சுகம் தான்). 

ஸ்கூல் முடிக்கும் வரைக்கூட நான் அத்தனை காபி பைத்தியமாய் இருந்தது இல்லை..எல்லாம் ஹாஸ்டல் காபி தான் காரணம்..

ஆனால் என்றைக்கு இந்த காலேஜ் வாசலில் காலடி எடுத்து வைத்தேனோ,அன்றைக்கு ஆரம்பித்து எங்கள் கேண்டீனுக்கு ப்ராபிட்..காலையில் எழுந்ததும் அண்ணா காபி ப்ளீஸ்!! என கேண்டீன் போய் நிற்பேன்(காலேஜ் கூட ஹாஸ்டல் தாங்க அய்யோ பாவம்னு நீங்க சொல்லுறது கேட்குது )...ஸ்ரீதேவி காலங்கார்த்தால வந்துடுச்சு பாரு.... என அவர் மனதில் என்னை அர்ச்சனை பண்ணிக்கொண்டே..காபியை கண்முன் நீட்டுவார் (நிஜத்துல அவரு வேற சொல்லி திட்டி இருப்பாரு ஆனா நம்ம இப்படி பப்ளிக்ல,நம்ம பேர நாமே ரிப்பேர் பண்ண வேண்டாம்னு தான்..இமேஜ்....இமேஜ்) 

காலேஜ் நுழைந்து மூன்றாவது மாதமே என்னை பார்த்தாலே காண்டீனில்... "ஹே தம்பி,ஒரு ஸ்ட்ராங் காபி போடு டா..சக்கரை கம்மியா அப்படிதானேமா???" என்பார் அந்த கேண்டீன் அண்ணா. "ஹி ஹி ஹி ..ஆனாலும் பயங்கர மெமரி பவர் அண்ணா உங்களுக்கு" - இது நானே தான்(வேற என்ன சொல்ல சொல்றீங்க)..

தோழிகளும், தோழர்களும் என்னை ஐஸ் வைக்கணும் என்றால், "வாங்கப்பா ஒரு காபி சாப்பிட்டுட்டு வரலாம்" என்று கிளம்பிவிடுவார்கள் அட என்னையும் இழுத்து கொண்டு தான்..

மூட் அவுட் என்றால் காபி..பிடிக்காத லெக்ச்சரர் கிளாஸ் என்றால் கட் அடித்து விட்டு காபி என வெற்றிகரமாக எனது சந்தோசத்திலேயும்,துக்கத்திலேயும்,உடல் நலகுன்றலின் போதும்,எனது தோழமைகளுடனும் எப்போதுமே ஒரு முக்கிய பங்காற்றியது,பகிர்ந்தும் கொண்டது எனதருமை காபி..

எனக்கும் காபிக்குமான சுவாரசியமான சுவைகள் நான் வேலைக்கு செல்ல துவங்கிய போது தான் அறிமுகம் ஆகியது..வேலைக்கு நடுவில் சரியாக பதினோரு மணி ஆனால் போதும் டாண் என்று பக்கத்து ஹோட்டலில் இருந்து காபி வந்து விடும்..

அந்த பில்ட்டர் காபியின் மணம்,குணம் அடிச்சுக்க முடியாதுங்க..இன்னமும் அச்சுவை நாக்கிலே உள்ளது... இக்காலக்கட்டதில் தான் முதல் முதலாக "காபி டே" சென்றது. 

ஆயிரத்தியெட்டு காபி வகைகள் இருந்தாலும் என்னை கவர்ந்தது "காப்பசினோ" மட்டுமே,வெயிட் வெயிட் நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இல்லேங்க எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிட்டு தான் இந்த முடிவுக்கு வந்தது...மேலே பஞ்சு போன்ற நுரையுடன் பார்க்கவே அழகாக இருக்கும் அதை குடிக்கவே மனம் வராது..ஆனால் அது எல்லாம் முதல் வாய் காபி சுவைக்கும் வரைக்கும் தான்,அப்புறம் சிறு கசப்பும்,இனிப்பும் ஆன அப்பானத்தின் சுவையே அலாதி தான்..

அதற்கு அடுத்த ஒரு வருடத்தில் எல்லா விதமான காபியின் சுவையும் எனக்கு அறிமுகமும்,அத்துபடியும் ஆனது, அதிலும் நம் தமிழகத்துக்கே உரித்தான பில்ட்டர் காபி,வர காபி,சுக்கு மல்லி காபி ,கருப்பட்டி காபி,எனக்கு பிடித்த திருவல்லிக்கேணி ரத்னா கபே காபி,முருகன் இட்லி கடை காபி மற்றும் சரவண பவன் காபி என என் விருப்பப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அன்று எங்கள் வீட்டில் எல்லோரிடத்திலும் ஒரு பரபரப்பு வீட்டின் முதல் பேத்தியான என் அக்கா விசேஷமாக இருந்தாள் என்பதே அதற்கு காரணம், அம்பத்தூரை அடுத்த ஒரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அச்செய்தியை உறுதி படுத்த சென்றோம்..அப்பொழுதும் அக்கா தான் முதலில், " ஹே ப்ளீஸ் ஒரு காபி வாங்கி கொடேன்" என ஆரம்பித்தாள். 

அவள் ஆசையை நிராசை ஆக்க விரும்பாமல் காண்டீனில் போய் எனக்கும் சேர்த்து காபி வாங்கி வந்தேன்..பயண அலைச்சலோ, இல்லை உடம்பின் சூடோ, இல்லை தேவையில்லாத அக்காவின் பயமோ..காபி குடித்து கொண்டிருக்கும் போதே அக்காவின் முகம் அஷ்ட்டக்கோணலானது. அதற்கு இரண்டு தினங்கள் கழித்து அக்கா வெறும் வயிற்றுடனும், மனது முழுதும் பாரத்துடனும் வீடு வந்து சேர்ந்தோம்..

அன்றிலிருந்து இதோ இந்த மழை நாளின் போதும் நான் காபி குடிப்பதில்லை..ஒவ்வொரு கப் காப்பியும் என் அக்காவின் அன்றைய தினத்தையே ஞாபகப்படுத்துகிறது. அந்நினைவு மனதை பிழிகிறது,முன்னர் இதே காபி எனக்கு பலசமயங்களில்,பலவற்றை மறக்க உதவி செய்திருக்கிறது. ஆனால் இன்று காபியை தொடவே மனம் விரும்பவில்லை.

யாரால் நான் காபியை வெறுத்தேனோ, அவள் இன்று வரை நாளுக்கு மூணு காபி என சுகபோகமாக அனுபவிக்கிறாள் ஆனால் என்னால் முடியவில்லை..

மழை நாளும் என் மனதிற்கினிய காபியும் ... என்றும் என்னில் இருக்கும்...

இதோ இந்நன்னாளில் உங்களை போன்ற ஒரு தோழியுடன் காபி குடிக்க மனம் விரும்புகிறது.."மச்சி ஒரு காபி சொல்லேன் ப்ளீஸ்"...


பி.கு

என்னையும் உற்சாகப்படுத்தி இதை எழுத தூண்டுகோலாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.

என்னை போன்ற காபி பைத்தியமான(இன்றும்) பிரியதோழி பானுவிற்க்கும், வாழ்வில் காபியே குடித்து அறியாத ஆஷா அக்காவிற்கும் இது சமர்ப்பணம்.
பெரும்பான்மையான குற்றச்சாட்டு நம்மில் பலர் படித்து முடித்ததும் வெளி நாட்டினை நோக்கி சென்று விடுவதால் தான் இந்தியா இந்த நிலைமையில் இருக்கிறது என்பதுதான்.. இதை கேட்கையில் இது முற்றிலும் உண்மை தான் என்பது போல் தான் நமக்கு தோன்றும்..ஆனால் அங்கு வேலைக்காக சென்றிருக்கும் ஒரு தோழியின் மனக்குமுறலை கேட்டபின் அதற்கு பதில் சொல்ல என்னால் முடியவில்லை..

தோழியின் வார்த்தைகள்.:-

சமீபத்தில் தளம் ஒன்றில், எங்களை (வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களை) கண்டால் வெட்கமாகவும், வேதனையாகவும் இருப்பதாக தோழர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். அதோடல்லாது நாங்கள் பகட்டிற்காக அந்நியதேசத்தில் கையேந்தி நிற்க்கிறோமாம்...மேலும் திறமை படைத்தவர்கள்( அப்போ நீங்க எல்லாம் என்ன முட்டாள்களா ???)எல்லாம் அயல் நாடு போய்விட்டதால் இந்தியா இன்று இந்நிலையில் உள்ளதாம்.

எனக்கு எப்போதும் ஒன்று மட்டும் புரிவதில்லை, என் நாடு, என் நாடு என தொண்டை கிழிய கத்தி எங்களை குற்றம் சாட்டும் நாட்டுபற்றுகளே..இன்றைய இந்தியாவின் நிலை உங்களால் தன் என நான் சொல்வேன்.

என் வீட்டில் எதுவும் கோளாறு என்றால், நான் வாடகைக்கு அமர்த்தி இருக்கும், என் வீட்டில் வசிக்கும் நபரையே கேள்வி கேட்பேன். அப்படி இருக்கும் போது சொந்த மண்ணில் வசித்து அதை இந்நிலைமைக்கு கொண்டு வந்த நீங்கள் குற்றவாளிகளா இல்லை அயல் நாட்டில் வசிக்கும் நாங்களா??? அயல் நாட்டில் எங்களது திறமைக்கு அங்கிகாரம் இருக்கிறது, எங்களால் சொந்த மண்ணில் குறைந்தது இரண்டு வீட்டிலாவது அடுப்பெரிகிறது, தானமும், தர்மமும் முடிஞ்சவரை செய்கின்றோம். இங்கே அந்நிய தேச மோகத்திற்காக மட்டும்  நாங்கள் வரவில்லை.

என்னை குற்றம் சாட்டுபவரிடம் நான் எப்போதும் கேட்பது இது ஒன்றை தான். இத்தனை பேசும் நீங்கள் நாடு முன்னேற என்ன கிழித்தீர்கள்??? நாட்டை விடுங்கள், மாநிலம் இல்லை குறைந்தபட்சம் மாவட்டம், அவ்வளவு ஏன் உங்கள் ஊர் அல்லது தெரு மட்டுமேனும் ஏதாவது உபயோகமாக செய்து இருக்கிறீர்களா ???


ஆம் எனில், நானும் உங்களுடன் கைகோர்க்க தயார்..லட்சங்கள் வேண்டாம், உங்கள் லட்சியமே முக்கியம் என இந்நாட்டை துச்சமாக தூக்கி எரிந்து விட்டு வர நான் தயார்..கூறுங்கள் தோழர்களே.......

Monday, 20 February 2012

பெயரிழந்த பறவையாகிறேன்
நான்..
குற்றத்தின் சுமையும்
என் சிறகின் மேல்..


Saturday, 18 February 2012

"பெண்மை" - காதலர் தின போட்டியின் பரிசு பெற்ற என் கட்டுரை


காதல் உணரப்படும்போதும்,உரைக்கப்படும்போதும் நம் உள்ளத்தை உரசிப்பார்க்கும் உணர்வென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

அனைத்து உயிர்களிடத்தும் உருவாகின்ற ஓர் அற்புத உணர்வு காதல்..பார்க்கப்படும் விதம் தான் மாறும்.. ஐந்தறிவு, ஆறறிவு என பேதம் பார்க்காது காதல்.. ஓரறிவு ,ஐந்தறிவு உயிர்களோ அதற்கு தெரிந்த மொழியில் காதலிக்கின்றன, மனிதனோ காதலையே ஒரு மொழியாக்கி அதிலே அமிழ்ந்தும் போகின்றான்..

துன்பமும் இன்பமும் ஒரு புள்ளியில் இணைவதும் காதலால் தான் ..இணைந்த இதயங்கள் பிரிந்தும் ஒன்றுக்காக மற்றொன்று துடிப்பதும் காதலால் தான் ..


வாழ்க்கை பயணத்தில் எதோ ஒரு நிறுத்தத்தில் தடுக்கி விழுவதை காதலாக பார்க்கிறவர்கள் தான் இங்கு அதிகம்..தடுமாறி வீழுமுன் கைதூக்கி விடுவது தான் காதல்.. அது ஹார்மோன்களின் சுரப்பினால் பார்த்ததும் பொங்கி விடும் உணர்வன்று, உயிர் வரை தீண்டி உறவாடும் உணர்வுதான் காதல்..

ஆசை, காமம் காதலோடு இயைந்தவையாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காதலாக பார்க்கப்படும்போது தான் காதலின் புனிதம் தேய்ந்து விடுகிறது.. காதல் ஆசை அடங்கியபின்னும், காமம் கலைந்தபின்னும் உணர்வாக உள்ளுக்குள் தேங்கி நிற்கும்.


வைரமுத்து சொல்வது போல் உறுப்புகள் நீங்கிய உணர்வை அனுபவித்தால் தான் தெரியும் காதலின் சக்தியை, ஆழத்தை..


உனக்காக நான் , எனக்காக நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்பது கூட எதிர்பார்ப்புதான் , எதிர்பார்ப்புகளற்ற ஒரு உறவில் காதல் மிக எளிதாக இயைந்து போகிறது.. எனக்காக படைக்கப்பட்ட இன்னொரு உயிர் நீதான் என்ற உணர்வு யாரிடத்தில் பொங்குகிறதோ அந்த உணர்வு காதலாகி கசிந்து உயிராக மாறுகிறது..


இதய பரிமாற்றம் இதயத்தோடு இணைந்து வாழ்ந்தால் அங்கு காதல் பூரணமடைகிறது, அது உடலை சார்ந்து மட்டும் அமையும்போது காதல் நீர்த்து விடுகிறது..


பட்டாம்பூச்சியின் சிறகசைப்பின் மென்மையும் கல்லின் உறுதியும் ஒன்று சேர்ந்து இருப்பது தான் காதல், ஒரு இதயம் நினைப்பதை சொல்லாமலே அடுத்த இதயம் புரிந்து கொள்வது தான் காதல்..


மலையையும் சிறு கடுகாக பார்க்க தெரிந்த காதலுக்கு சிறிது நேர பிரிவே சுமையாகி வாழ்வை கசக்க செய்யும் மாயமும் அதற்கு தான் உண்டு..


உடல் தாண்டி உயிர் தீண்டுகையில் காதல் ஸ்பரிசிக்க படுகிறது.. அதுவே வாழ்வின் கருவாகவும் பிரபஞ்சமெங்கும் பரவுகிறது..


சற்றேறக்குறைய மரணத்தையும் ஜீவிதத்தையும் உணரவைப்பது காதல் தான்.. மானுடம் மனிதத்தன்மையோடு வாழ காதல் தான் காரணம், மென்மையான ஒருவன் மூர்க்கமாவதும், மூர்க்கன் மென்மையாவதும் காதலினால் தான்..


குடைக்குள்ளும், புதருக்குள்ளும் , கடற்கரையிலும் வளரும் காதல் காமத்தை மட்டுமே சென்றடையும், ஊனுருக்கி , உயிருறுக்கி,உள்ளுக்குள் வளரும் காதல் உன்னதத்தை அடையும்..


காதல் உணர்வை ருசிக்காதவன் மனிதனில்லை.. அப்படிப்பட்ட மனிதனும் இன்னும் பிறக்கவில்லை..


காத்திருந்து தவித்து, ஒன்றுடன் ஒன்று கலந்து ,ஒன்றுமில்லாமல் ஒருயிராய் கரைந்து விடுவது தான் காதல்..


காதலினை காதலிப்போம் , உயிர்கள் உய்வித்திருக்க... உணர்வுகள் உருமாறாதிருக்க..


கண்கள் வழி நுழைந்து உயிரை நிரப்பும் உணர்வினை அனுபவிக்க வேண்டுமா .. உயிர் மீட்டும் வீணையொலி காதில் ரீங்காரமிட வேண்டுமா... ஈருடல் ஓருயிர் சுமக்கும் மாயம் அறிய வேண்டுமா ..


காதலித்து பாருங்கள்.. காதல் உங்களை காதலிக்கும் .. ஆகையினால் காதல் செய்வீர்...


இரு கண்களின் இதய மொழி....

உயிரை உருக்கி உயிருக்குள்
இன்னொரு உயிரை பதியமிடும்
கடவுள்...

கண்சிமிட்டலின் மின்னல்
இடியாய் இதயம் இறங்கும்...

வாழ்க்கை பாதையின்
இனிய நிறுத்தம் ..

இதயக்கருப்பையின் நிரந்தர
கரு காதல்..


ஆகையினால் காதல் செய்வீர்...
ஒற்றை சொல்
வேரறுத்து விடுகிறது
சுலபமாய்
நமக்கான நட்பை..
முகம் மறைத்து வழிப்பிரிந்து
செல்கையில் தான்
இதயம் நிறைக்கிறது
உன் நினைவுகள்.
காட்சிகள் கோர்த்து கொண்டே
விரிகையில் சிறகொடிந்த
பறவையாய் வீழ்கிறேன்..
என் கர்வத்தின் முன்..
இருந்தும் ...
முற்றுப்புள்ளியாய்
உன் கடைசி வார்த்தை..

Wednesday, 8 February 2012

ஹைக்கூ

ஹைக்கூ

மூன்று வரிகளில் முழுமையாக சொல்ல வந்ததை சொல்வது. இருபதாம் நூற்றாண்டின்  ஆரம்பத்தில் இந்தியாவிற்கு அறிமுகமான கவிதை நடை இது. நாமெல்லாம் பெருமை பட்டு கொள்ளலாம் நம் பாட்டன் பாரதி தமிழுக்கு அறிமுகபடுத்தினார் தன் சுதேசமித்திரனில் என்று. 

சில பொதுவான விதிகள் 
  • ஒரு ஒற்றை வரியில் பதினேழு வார்த்தைகள் அல்லது மூன்று வரிகளில், அல்லது மூன்று வரிசைகளில் 5-7-5. 
  • இரண்டாவது வரிசையில் நீண்டு ஆனால் பதினேழு எண்ணிக்கையிலில்லாமல் 
  • ஒன்றின் கீழ் ஒன்றாக
  • ஒரே மூச்சில் படித்துவிடகூடிய
  • மூன்று வரிகளையும் வாசிக்கும்போது ஒரே வாக்கியமாக இல்லாமல் 
  • இரண்டாவது அல்லது மூன்றாம் வரிகளில் ஒரு இடைநிறுத்தம் கொண்டு 
  • எப்போதும் நிகழ்காலத்தில் 
  • உருவகபடுத்தாமல்
  • தெளிவாக விளங்கும்படி ஜென் கதைகளை போல் படித்ததும் புரிந்துவிடகூடிய 
  • எதுகை , மோனை பயன்படுத்தாமல்

சில எடுத்துகாட்டுக்கள் 

மூலைகள் வெட்டப்பட்டன 
காகித கப்பல் 
நான் மீண்டும் மிதக்க - (முதல் தமிழ் ஹைக்கூ - வெங்கட்ரமணி )

கண்ணாடியை துடைக்க துடைக்க 
என் முகத்தின் அழுக்கு 
தெளிவாகிறது 

பிம்பங்களற்ற  தனிமையில் 
ஒன்றையொன்று முகம்பார்த்தன
சலூன் கண்ணாடிகள் - நா . முத்துக்குமார்      

மீன் துள்ளுகிறது 
ஜலத்தில் 
சலசலக்கும் மேகங்கள் 

காரில் அடிபட்டு நசித்த பின்
நாயின்  வால் மட்டும் 
அசைகிறது 
-சுஜாதா 

ஒரு பெரிய வெறுமை 
வெட்கமில்லாத
 வானம் 

வகுப்பறை 
ஒரு குழந்தை கவனிக்கிறது பரவசத்துடன் 
ஜன்னலில் மேகம்

ஒரு நீண்ட பேச்சு 
நிறுத்தப்பட்டது 
ரயில் 
- அமுத பாரதி


முகம் பார்க்கும் நிலவை
முத்தமிட்டு உடைக்கும்
கரையோர தவளைகள்

பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வை பிம்பங்கள்


மழையில் நனையும்
ஓட்டை குடைகள்
மரங்கள்


தோல் தொழிற்சாலை-
நிலவு மூச்சு கஷ்டப்படுகிறது
கழிவு நீர்

-அறிவுமதி

குளம்
கொக்குகள் எங்கே பறந்தன -
விசில் ஒலி

(திருச்சி கவித்துவன் )

இருண்ட கிராமங்கள் வழியாக
இதயமற்ற நகரங்களுக்கு செல்லவும்
மின்சார கேபிள்கள் - முருகன்

உடைக்கும் வரை
உயிரோடிருந்தது
குழந்தையின் மான் பொம்மை

இருட்டில் அமர்ந்து
மௌனத்தை தின்னும்
அணைந்த மெழுகுவத்தி

(மு.முருகேஷ் )

பௌர்ணமி
வீடுகள் இழந்த
நண்டுகள்

பிணத்தின் மீது மாலை
தேனுக்கு வரும்
வீட்டு எறும்புகள்

 இரவு நேரம் தாலாட்டும் மின்விசிறி
எட்டிப்பார்க்கும்
 நிலா 
- மித்ரா

(நன்றி a. தியாகராஜன் ) 

இந்த கவிதைகள்  எல்லாமே விதிகளுக்கு உட்பட்டுதான் எழுதபட்டிருக்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் நம் மரபுக்கவிதைகளிலும் , புதுக்கவிதைகளிலும் சொல்லப்பட்டிருக்கும் இலக்கணம் மீறிய நடையில் அமைந்துள்ளன இக்கவிதைகள். சுஜாதா , அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் நிறைய எழுத்தாளர்களை ஹைக்கூ நடையில் எழுத ஊக்குவித்தார்கள் எனலாம் . ஆனால் சில கவிஞர்கள் அத்தனை விதிகளிலும் கவனம் கொண்டு ஹைகூவினை எழுத முடியாது என கூறியிருக்கிறார்கள். விதிகளை மீறி புது இலகனங்களை கொண்டு உருவான பல புதிய நடைகளை நாம் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். புதுமைகளை வரவேற்போம்.