Pages

Tuesday 21 February 2012

வாய் வழி அமிர்தமாய்
இறங்கி உடலெங்கும்
வழிந்தோடும் என் இனிய மதுரமே..




மதுரம் போன்ற என் தோழி கங்காவின் பதிவு இது.. அவளின் முதன் முயற்சி இது.. சகோதரிகளாக பிறந்திருக்க வேண்டிய நாங்கள் தோழிகளாகியிருக்கிறோம்.. என்னுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் ஆழமான , உண்மையான விமர்சனம் தந்து, சோம்பித்திரியும் என்னை செல்லமாக தட்டி(திட்டி) எழுத வைக்கும் மதுரத்தோழி அவள்.. இலக்கிய நடையில் இருக்கும் என் எழுத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கேலியும் கிண்டலுமான அவளின் எழுத்து நடை எனக்கு சில சமயங்களில் பொறாமையை தரும்.. அவளின் கன்னி முயற்சினை இங்கு பதிவிடுவதில் எனக்கு பெருமை..

குறுங்கட்டுரை .. வாழ்வில் ரசித்த பல நிமிடங்களை ரசிக்கும்படி தரும் அவளின் இந்த பதிவு எனக்கு மிகப்பிடிக்கும்.. குறைகள் சொல்ல வேண்டுமென்றால் சொல்வர் சிலர், ஆனால் குறைகளையும் நிறைகளாக பார்ப்பது தானே நட்பு..

இதோ அவள் பதிவு...


மழை நாளும் என் மனதிற்கினிய .......




அது ஒரு அந்திசாயும் பின்மாலை நேரம்.. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

நம்மூரின் மண்வாசனை,உடலையும் மனதையும் வருடி செல்லும் குளிர்ந்த காற்று,மரங்கள் தங்களுக்குள் சல சல என பேசிக்கொள்ளும் இனிய ஓசை, கூடு சேர விரைந்து செல்லும் பறவைகளின் இனிய நாதம்..

மழையின் வருகையை கட்டியம் கூறும் இவைகள் அனைத்தும் சேர்ந்து அம்மாலை வேளையை மிகவும் ரசிக்கத்தக்கதாக மாற்றிக்கொண்டிருந்தது.


ஏதோ ஒரு நிகழ்வு, 
இனம் புரியா உணர்வு, 
என்றோ தொலைத்த 
ஒரு உறவின் நினைவு ..

இவை அனைத்தின் சாரல்களும்,தூறல்களும் ஒவ்வொரு மழை நாளின் போதும் மறவாமல் என் இதயம் நனைக்கிறது.

மிதந்து வரும் 
மேகங்களில் ஓளிந்திருக்கும்
தோழி..

பூமித்தாய்மடியின்
சுகம் தேடி ஓடி 
வருகிறாள்..

மிக சிறிய தூறலாக ஆரம்பித்தது மழை..

கிளர்ந்து எழுந்த அம்மண்வாசனையோ ஒரு கை அள்ளி சாப்பிட மாட்டோமா என்ற ஏக்கத்தை கூட்டியது..மிக வேகமாக எழுந்து பால்கனியில் போய் அமர்ந்தேன்..சிலு சிலு என வீசிய தென்றல் மனதை கொள்ளை கொண்டது..முகத்தில் விழுந்த சாரல் மெய் மறக்க செய்தது..

"கங்கா... கங்கா..ஹே ..காதுல விழுதா இல்லையா".. வேற யாரு எங்க அக்கா தான்..அதானே நம்ம ஒரு நிமிஷம் உட்கார்ந்தா கூட பொறுக்காதே!!
"என்னக்கா வேணும் ???" என கேட்டதும் , " ஒரு கப் காபி கொடேன் ப்ளீஸ் ..நீ போடுற காப்பியே ஒரு தனி டேஸ்ட் தான்.." ஹூம்...இந்த ஐஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...

அசைந்தாடி எழுந்து கிச்சனில் நுழைந்தேன்..அடுப்பில் பாலை ஏற்றியதும் ஒரு சலனம் நமக்கும் ஒரு கப் சேர்த்து போட்டுடலாமா?? எப்படி பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கப் வராது,கூட தான் வரும்..கைபாட்டில் வேலை பார்க்க மனம் ஒரு புறம் காபி வேண்டுமா?? வேண்டாமா?? என தர்க்கம் செய்து கொண்டிருந்தது..

இதை எல்லாம் மீறி,என்னை சுற்றி உள்ளவை மறந்து மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது..

அட அது காபி பத்தி தாங்க....(நீங்க பெருசா எதிர் பார்த்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல, ஆமா சொல்லிட்டேன்)

வாய் வழி அமிர்தமாய்
இறங்கி உடலெங்கும்
வழிந்தோடும் என் இனிய மதுரமே

எனக்கும் காபிக்குமான அறிமுகம் எனது பதினாலு வயதில் ஆரம்பித்தது.அப்போது நான் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருந்தேன்...எனது எட்டு வயதிலிருந்தே காபி எனக்கு பரிச்சயம் தான் ஆனால் ஹாஸ்டலில் கொடுக்கப்படும் அந்த அமிர்த பானத்தை பருக என்றுமே எனக்கு விருப்பம் இருந்ததில்லை...

"தண்ணி வேணும்னா பைப்பில் பிடிச்சு குடித்தா..அதுக்கு ஏன் டைனிங் ஹாலுக்கு போற..ஹோ சுடு தண்ணி வேணுமா சரிபோத்தா"..எங்கள் ஹாஸ்டல் காபி குறித்து தோழிகள் அடிக்கும் கமெண்ட் இதுதான்..அவர்களின் இந்த கம்மென்ட்க்கு பயந்தோ..இல்லை எங்கே அதை குடித்தால் நம் காலையும் வாரிவிடுவார்கள் என்ற எண்ணத்திலோ...அதை குடிக்கும் துணிவு எனக்கு வந்ததில்லை..

இதே போல் ஒரு மழைநாளில் தான் எனக்கு காபி அறிமுகம் ஆனது..இதே எனது அக்காவின் கைவண்ணத்தில் தான்...ஒரு விடுமுறையில் வீடு வந்த போது என் அக்கா சித்தியிடம் "தலைவலிக்குது ஒரு காபி கொடுங்க சித்தி" என்று கேட்டு வாங்கிய காப்பியும்..."செல்ல செல்லம்மா(அது தாங்க அவங்க பேரு) சித்தி தானே..ஒரே ஒரு கப் ஹார்லிக்ஸ் கொடுங்க சித்தின்னு", நான் கேட்டு(ஐஸ் வச்சு) வாங்கிய ஹார்லிக்சும் எங்களை அறியாமல்,மழை சுவாரசியத்தில் இடம் மாறியது...

முதல் ஒரு சிப்பிலேயே எனக்கு அதன் மணமும்,சுவையும் பிடித்து போயின..எனக்கும் என் அக்காவும் அன்றிலிருந்து ஒத்து போன ஒரே விஷயம் அது மட்டும் தான்...அதற்கு பின் நான் காபி பைத்தியம் ஆனதற்கான முழு பொறுப்பும் என் அக்காவையே சேரும்(நம் தவறுகளுக்கு அடுத்தவர்களை கைநீட்டுவதில் என்றுமே ஒரு தனி சுகம் தான்). 

ஸ்கூல் முடிக்கும் வரைக்கூட நான் அத்தனை காபி பைத்தியமாய் இருந்தது இல்லை..எல்லாம் ஹாஸ்டல் காபி தான் காரணம்..

ஆனால் என்றைக்கு இந்த காலேஜ் வாசலில் காலடி எடுத்து வைத்தேனோ,அன்றைக்கு ஆரம்பித்து எங்கள் கேண்டீனுக்கு ப்ராபிட்..காலையில் எழுந்ததும் அண்ணா காபி ப்ளீஸ்!! என கேண்டீன் போய் நிற்பேன்(காலேஜ் கூட ஹாஸ்டல் தாங்க அய்யோ பாவம்னு நீங்க சொல்லுறது கேட்குது )...ஸ்ரீதேவி காலங்கார்த்தால வந்துடுச்சு பாரு.... என அவர் மனதில் என்னை அர்ச்சனை பண்ணிக்கொண்டே..காபியை கண்முன் நீட்டுவார் (நிஜத்துல அவரு வேற சொல்லி திட்டி இருப்பாரு ஆனா நம்ம இப்படி பப்ளிக்ல,நம்ம பேர நாமே ரிப்பேர் பண்ண வேண்டாம்னு தான்..இமேஜ்....இமேஜ்) 

காலேஜ் நுழைந்து மூன்றாவது மாதமே என்னை பார்த்தாலே காண்டீனில்... "ஹே தம்பி,ஒரு ஸ்ட்ராங் காபி போடு டா..சக்கரை கம்மியா அப்படிதானேமா???" என்பார் அந்த கேண்டீன் அண்ணா. "ஹி ஹி ஹி ..ஆனாலும் பயங்கர மெமரி பவர் அண்ணா உங்களுக்கு" - இது நானே தான்(வேற என்ன சொல்ல சொல்றீங்க)..

தோழிகளும், தோழர்களும் என்னை ஐஸ் வைக்கணும் என்றால், "வாங்கப்பா ஒரு காபி சாப்பிட்டுட்டு வரலாம்" என்று கிளம்பிவிடுவார்கள் அட என்னையும் இழுத்து கொண்டு தான்..

மூட் அவுட் என்றால் காபி..பிடிக்காத லெக்ச்சரர் கிளாஸ் என்றால் கட் அடித்து விட்டு காபி என வெற்றிகரமாக எனது சந்தோசத்திலேயும்,துக்கத்திலேயும்,உடல் நலகுன்றலின் போதும்,எனது தோழமைகளுடனும் எப்போதுமே ஒரு முக்கிய பங்காற்றியது,பகிர்ந்தும் கொண்டது எனதருமை காபி..

எனக்கும் காபிக்குமான சுவாரசியமான சுவைகள் நான் வேலைக்கு செல்ல துவங்கிய போது தான் அறிமுகம் ஆகியது..வேலைக்கு நடுவில் சரியாக பதினோரு மணி ஆனால் போதும் டாண் என்று பக்கத்து ஹோட்டலில் இருந்து காபி வந்து விடும்..

அந்த பில்ட்டர் காபியின் மணம்,குணம் அடிச்சுக்க முடியாதுங்க..இன்னமும் அச்சுவை நாக்கிலே உள்ளது... இக்காலக்கட்டதில் தான் முதல் முதலாக "காபி டே" சென்றது. 

ஆயிரத்தியெட்டு காபி வகைகள் இருந்தாலும் என்னை கவர்ந்தது "காப்பசினோ" மட்டுமே,வெயிட் வெயிட் நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இல்லேங்க எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிட்டு தான் இந்த முடிவுக்கு வந்தது...மேலே பஞ்சு போன்ற நுரையுடன் பார்க்கவே அழகாக இருக்கும் அதை குடிக்கவே மனம் வராது..ஆனால் அது எல்லாம் முதல் வாய் காபி சுவைக்கும் வரைக்கும் தான்,அப்புறம் சிறு கசப்பும்,இனிப்பும் ஆன அப்பானத்தின் சுவையே அலாதி தான்..

அதற்கு அடுத்த ஒரு வருடத்தில் எல்லா விதமான காபியின் சுவையும் எனக்கு அறிமுகமும்,அத்துபடியும் ஆனது, அதிலும் நம் தமிழகத்துக்கே உரித்தான பில்ட்டர் காபி,வர காபி,சுக்கு மல்லி காபி ,கருப்பட்டி காபி,எனக்கு பிடித்த திருவல்லிக்கேணி ரத்னா கபே காபி,முருகன் இட்லி கடை காபி மற்றும் சரவண பவன் காபி என என் விருப்பப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அன்று எங்கள் வீட்டில் எல்லோரிடத்திலும் ஒரு பரபரப்பு வீட்டின் முதல் பேத்தியான என் அக்கா விசேஷமாக இருந்தாள் என்பதே அதற்கு காரணம், அம்பத்தூரை அடுத்த ஒரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அச்செய்தியை உறுதி படுத்த சென்றோம்..அப்பொழுதும் அக்கா தான் முதலில், " ஹே ப்ளீஸ் ஒரு காபி வாங்கி கொடேன்" என ஆரம்பித்தாள். 

அவள் ஆசையை நிராசை ஆக்க விரும்பாமல் காண்டீனில் போய் எனக்கும் சேர்த்து காபி வாங்கி வந்தேன்..பயண அலைச்சலோ, இல்லை உடம்பின் சூடோ, இல்லை தேவையில்லாத அக்காவின் பயமோ..காபி குடித்து கொண்டிருக்கும் போதே அக்காவின் முகம் அஷ்ட்டக்கோணலானது. அதற்கு இரண்டு தினங்கள் கழித்து அக்கா வெறும் வயிற்றுடனும், மனது முழுதும் பாரத்துடனும் வீடு வந்து சேர்ந்தோம்..

அன்றிலிருந்து இதோ இந்த மழை நாளின் போதும் நான் காபி குடிப்பதில்லை..ஒவ்வொரு கப் காப்பியும் என் அக்காவின் அன்றைய தினத்தையே ஞாபகப்படுத்துகிறது. அந்நினைவு மனதை பிழிகிறது,முன்னர் இதே காபி எனக்கு பலசமயங்களில்,பலவற்றை மறக்க உதவி செய்திருக்கிறது. ஆனால் இன்று காபியை தொடவே மனம் விரும்பவில்லை.

யாரால் நான் காபியை வெறுத்தேனோ, அவள் இன்று வரை நாளுக்கு மூணு காபி என சுகபோகமாக அனுபவிக்கிறாள் ஆனால் என்னால் முடியவில்லை..

மழை நாளும் என் மனதிற்கினிய காபியும் ... என்றும் என்னில் இருக்கும்...

இதோ இந்நன்னாளில் உங்களை போன்ற ஒரு தோழியுடன் காபி குடிக்க மனம் விரும்புகிறது.."மச்சி ஒரு காபி சொல்லேன் ப்ளீஸ்"...


பி.கு

என்னையும் உற்சாகப்படுத்தி இதை எழுத தூண்டுகோலாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.

என்னை போன்ற காபி பைத்தியமான(இன்றும்) பிரியதோழி பானுவிற்க்கும், வாழ்வில் காபியே குடித்து அறியாத ஆஷா அக்காவிற்கும் இது சமர்ப்பணம்.

No comments:

Post a Comment