Pages

Saturday 18 February 2012

"பெண்மை" - காதலர் தின போட்டியின் பரிசு பெற்ற என் கட்டுரை


காதல் உணரப்படும்போதும்,உரைக்கப்படும்போதும் நம் உள்ளத்தை உரசிப்பார்க்கும் உணர்வென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

அனைத்து உயிர்களிடத்தும் உருவாகின்ற ஓர் அற்புத உணர்வு காதல்..பார்க்கப்படும் விதம் தான் மாறும்.. ஐந்தறிவு, ஆறறிவு என பேதம் பார்க்காது காதல்.. ஓரறிவு ,ஐந்தறிவு உயிர்களோ அதற்கு தெரிந்த மொழியில் காதலிக்கின்றன, மனிதனோ காதலையே ஒரு மொழியாக்கி அதிலே அமிழ்ந்தும் போகின்றான்..

துன்பமும் இன்பமும் ஒரு புள்ளியில் இணைவதும் காதலால் தான் ..இணைந்த இதயங்கள் பிரிந்தும் ஒன்றுக்காக மற்றொன்று துடிப்பதும் காதலால் தான் ..


வாழ்க்கை பயணத்தில் எதோ ஒரு நிறுத்தத்தில் தடுக்கி விழுவதை காதலாக பார்க்கிறவர்கள் தான் இங்கு அதிகம்..தடுமாறி வீழுமுன் கைதூக்கி விடுவது தான் காதல்.. அது ஹார்மோன்களின் சுரப்பினால் பார்த்ததும் பொங்கி விடும் உணர்வன்று, உயிர் வரை தீண்டி உறவாடும் உணர்வுதான் காதல்..

ஆசை, காமம் காதலோடு இயைந்தவையாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காதலாக பார்க்கப்படும்போது தான் காதலின் புனிதம் தேய்ந்து விடுகிறது.. காதல் ஆசை அடங்கியபின்னும், காமம் கலைந்தபின்னும் உணர்வாக உள்ளுக்குள் தேங்கி நிற்கும்.


வைரமுத்து சொல்வது போல் உறுப்புகள் நீங்கிய உணர்வை அனுபவித்தால் தான் தெரியும் காதலின் சக்தியை, ஆழத்தை..


உனக்காக நான் , எனக்காக நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்பது கூட எதிர்பார்ப்புதான் , எதிர்பார்ப்புகளற்ற ஒரு உறவில் காதல் மிக எளிதாக இயைந்து போகிறது.. எனக்காக படைக்கப்பட்ட இன்னொரு உயிர் நீதான் என்ற உணர்வு யாரிடத்தில் பொங்குகிறதோ அந்த உணர்வு காதலாகி கசிந்து உயிராக மாறுகிறது..


இதய பரிமாற்றம் இதயத்தோடு இணைந்து வாழ்ந்தால் அங்கு காதல் பூரணமடைகிறது, அது உடலை சார்ந்து மட்டும் அமையும்போது காதல் நீர்த்து விடுகிறது..


பட்டாம்பூச்சியின் சிறகசைப்பின் மென்மையும் கல்லின் உறுதியும் ஒன்று சேர்ந்து இருப்பது தான் காதல், ஒரு இதயம் நினைப்பதை சொல்லாமலே அடுத்த இதயம் புரிந்து கொள்வது தான் காதல்..


மலையையும் சிறு கடுகாக பார்க்க தெரிந்த காதலுக்கு சிறிது நேர பிரிவே சுமையாகி வாழ்வை கசக்க செய்யும் மாயமும் அதற்கு தான் உண்டு..


உடல் தாண்டி உயிர் தீண்டுகையில் காதல் ஸ்பரிசிக்க படுகிறது.. அதுவே வாழ்வின் கருவாகவும் பிரபஞ்சமெங்கும் பரவுகிறது..


சற்றேறக்குறைய மரணத்தையும் ஜீவிதத்தையும் உணரவைப்பது காதல் தான்.. மானுடம் மனிதத்தன்மையோடு வாழ காதல் தான் காரணம், மென்மையான ஒருவன் மூர்க்கமாவதும், மூர்க்கன் மென்மையாவதும் காதலினால் தான்..


குடைக்குள்ளும், புதருக்குள்ளும் , கடற்கரையிலும் வளரும் காதல் காமத்தை மட்டுமே சென்றடையும், ஊனுருக்கி , உயிருறுக்கி,உள்ளுக்குள் வளரும் காதல் உன்னதத்தை அடையும்..


காதல் உணர்வை ருசிக்காதவன் மனிதனில்லை.. அப்படிப்பட்ட மனிதனும் இன்னும் பிறக்கவில்லை..


காத்திருந்து தவித்து, ஒன்றுடன் ஒன்று கலந்து ,ஒன்றுமில்லாமல் ஒருயிராய் கரைந்து விடுவது தான் காதல்..


காதலினை காதலிப்போம் , உயிர்கள் உய்வித்திருக்க... உணர்வுகள் உருமாறாதிருக்க..


கண்கள் வழி நுழைந்து உயிரை நிரப்பும் உணர்வினை அனுபவிக்க வேண்டுமா .. உயிர் மீட்டும் வீணையொலி காதில் ரீங்காரமிட வேண்டுமா... ஈருடல் ஓருயிர் சுமக்கும் மாயம் அறிய வேண்டுமா ..


காதலித்து பாருங்கள்.. காதல் உங்களை காதலிக்கும் .. ஆகையினால் காதல் செய்வீர்...


இரு கண்களின் இதய மொழி....

உயிரை உருக்கி உயிருக்குள்
இன்னொரு உயிரை பதியமிடும்
கடவுள்...

கண்சிமிட்டலின் மின்னல்
இடியாய் இதயம் இறங்கும்...

வாழ்க்கை பாதையின்
இனிய நிறுத்தம் ..

இதயக்கருப்பையின் நிரந்தர
கரு காதல்..


ஆகையினால் காதல் செய்வீர்...

1 comment: