Pages

Wednesday 17 August 2011

அவள்


சில்லென்ற காற்று என்னை மோதி சென்றபோது கிட்டத்தட்ட வீடிருக்கும் வீதிக்கு வந்து விட்டேன் . உறுதியாய் எனக்கு தெரியும் இன்று அவள் என்னை பார்க்க வருவாள் என்று.



கவலை மறந்து ஒரு சிறிய சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்த என்னை வித்தியாசமாக தான் பார்த்தார் என் அம்மா.. எனக்கு பிடித்த பாடல் வானொலியில் ஒலிக்க சிறு துள்ளலுடன் ஓடி சென்று புத்துணர்வு பெற்றேன் ... சரியாக சொல்லவேண்டுமெனில் என் பிறந்த நாளில் தான் அவளை சந்தித்தேன் எனக்கு விவரம் தெரிந்து, என் வாழ்வின் முக்கிய தினங்களில் அவள் கண்டிப்பாய் வருகை தருவாள்.அவள் வந்த நாளில் நான் தவறாமல் கவிதை எழுதியிருப்பேன் .



அவள் வருகைக்காக காத்திருப்பதும் காத்திருந்து ஏமாறுவதும் சில நாள் .. நம்பிக்கையோடு காத்திருக்கும்போது ஏமாற்றாமல் வந்தும் விடுவாள் சில நாள்..



ஏமாந்த நாட்களில் இருக்கட்டும் எப்படியும் என் வாயிற்படியை மிதித்து தானே ஆக வேண்டும் என்று இருமாந்திருப்பேன், அவள் வருகைக்கான முன்னறிவிப்புகள் வரத்தொடங்கியதும் கோபங்கள் காற்றிலே போகும் .



சிறிது காலமாய் அவள் முக்கியமாக படவில்லை என்னுள் புதியதாய் மலர்ந்த காதலினால், சில நாட்களாக நான் அவளை ஏமாற்ற தொடங்கியிருந்தேன் , அவளை பற்றி நினைப்பதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை...அதனாலோ என்னவோ அவள் வருகையை நிறுத்திவிட்டாள்...



இரண்டு மூன்று நாட்களாக என் காதல் துணையுடன் ஏற்பட்ட பிணக்கினால் நான் மீண்டும் அவளை நினைக்க ஆரம்பித்தேன் , அவளை தவிர யாரிடம் பகிர்ந்து கொள்ளமுடியும் என் துக்கத்தை....



எனக்கே வெட்கமாயிருந்தது அவளை நினைத்து பார்க்கவும் அவள் வருகைக்காக எதிர்பார்ப்பதற்கும், என்ன செய்வது அவளிடம் மானசீக மன்னிப்பு கேட்கிறேன் ....இன்று எல்லாவற்றையும் விட அவள் முக்கியமாக படுகிறாள் ...



அவள் வருகைக்கான அறிகுறிகள் மாலையில் தென்பட ஆரம்பித்ததுமே அவள் என்னை மன்னித்து விட்டாள் என்று பெருமகிழ்ச்சி கொண்டேன் ...



ஏமாற்றி விடுவாளோ என் மேல் உள்ள கோபத்தால்... ம் ...மேகம் தன் நிறத்தை காட்டி கண்ணனை வம்பிழுக்க ஆரம்பிக்கிறது..என் கண்கள் நீர் விட காத்திருக்கிறது ...



என் கைத்தலம் பற்றி ஓர் முத்துதிர்த்தாள், என் கண்ணீரும் அவளும் ஒன்றாய் சேர்ந்ததில் என் துன்பம் கரைவதை காண்கிறேன்,பாசத்தோடு என்னை நனைக்கிறாள் என் மழை தோழி.... என்னை ஏமாற்றாமல் ...

No comments:

Post a Comment