புறந்தள்ளலின் ஒவ்வொரு
முடிவும் உன் ஸ்பரிசங்களில்
சமனப்படுத்திக்கொண்டதாகவே
நினைக்கத்தோன்றுகிறது.
நமக்கான மாற்றங்கள்
ஒவ்வொரு ஊடலிலும் மிகமிகப்
பெரிதாய் மறைக்கப்பட்டதாகவே
நினைக்கத்தோன்றுகிறது.
பிணைக்கப்பட்டதற்காய்
பிணைந்திருந்து, சங்கிலி
அறுபடக்காத்திருந்து பிரிந்ததாகவே
நினைக்கத்தோன்றுகிறது.
ஒவ்வொரு வார்த்தையின் இறுதியும்
முடிக்கப்படாமல் கடந்ததிலேயே
ஏதோ ஒன்று உன்னிடமிருந்து முடிக்கப்பட்டதாகவே
நினைக்கத்தோன்றுகிறது.
வெற்றிடக்குமிழினுள் அடைப்பட்டிருந்த
காற்றாகவே நீ இருந்ததாய்
எனக்கு காண்பித்து சென்றாய் என்பதாகவே
நினைக்கத்தோன்றுகிறது.
எனவே தான் உன் ஒதுக்கத்தின் முன்
ஒதுங்குதலுமாய்,புறக்கணிப்புக்குமுன்
புறக்கணித்தலுமாய் முன்னேறிக்கொண்டு
விரைந்து விடுகிறேன்.
சமனற்ற நிலையாகவே
தோன்றவில்லை நீ ஒதுக்கி சென்றபோதும்,
உன் தீர்க்க முடியா காதல்
தீர்ந்த புள்ளியாகவே என் ஒற்றை நிலை.

மலைகள் இதழில் வெளியாகிய கவிதை
No comments:
Post a Comment