யாருமேயில்லாத இரவுக்குள்
பெரும்பாலும் என்னைத்தொலைத்து
விடுவதே வாடிக்கையாயிற்று என் கனவுகளுக்கு.
மீசையை நீட்டிக்கொண்டு
நாவால் உதடுவருடிக்கொண்டிருக்கும் பூனையோ
கிளைமீது தனித்திருந்து நதி நீரில்
நெளிந்து செல்லும் மீனைக்கவ்விப்பறக்கும்
மீன்கொத்தியோ,
நெடுமலையின் உச்சியிலிருந்து
தலைக்கீழாய் விழுந்துவிடவோ,
இருட்டறையில் பாம்படம்
அணிந்த பாட்டிகளின் அருகில்
மணப்பெண்ணாகவோ,
அறைமுழுதும் சிதறிக்கிடக்கும்
சந்தனத்திலும், பூக்களிலும்
பிரண்டுசெல்வதாகவோ,
இறந்துப்போன அம்மாவின்
சேலைப்பற்றி கதைசொல்வதாகவோ
பழுத்தோலைகளின் நடுவே மணல்கீறும்
சிறுமியாகவோ
ஒரு கனவும் வருவதேயில்லை
கனவுகளில் தொலைபவருக்கு
கனவுகள் வராமல்தான் இருக்குமோ.
