Pages

Wednesday, 30 January 2013




நினைவுகளின் நிழல்கள்

உதிர்ந்துக்கொண்டிருக்கும்
இலைகளின் இடைவெளியில்
கரைத்துக்கொண்டிருக்கிறது உன்னைப்பற்றியதான
நினைவுகளின் நிழல்கள்.

அழுந்தப்பற்றிக்கொண்டிருக்கும்
கால்களின் விசையை நழுவச்செய்து விடுகிறது
உன் காதல் ஓய்ந்த பாதைகளின் ஈரம்.

தோற்றப்பிழைகளினூடே கரைந்து
வெற்றுப்பரப்பின் ஏதோ ஒரு மணற்துளியில்
அமர்ந்துக்கொள்கிறது உன் மீதான ப்ரியங்கள்.

கிளர்ந்தடங்கிய உணர்வுகளின் கணங்களில்
எப்பொழுதோ அடக்கி வைத்திருந்த ஒரு காதல்
முழு ஆயுளையும் ஒரு சேரப்பற்றி விடுகிறது.

வார்த்தைகள் வெளிவராது தவித்திருந்த
சூன்யப்பொழுதுகளை நிறைத்துக்கொள்கிறது
உன் பொலிவிழந்த கோபங்களின் நிறங்கள்.

அழுத்தம் தாளாது வெடிக்கக்காத்திருக்கும்
நம் வறண்டப்பக்கங்களின் தனிமை
எப்பொழுதேனும் உன்னிடம் சொல்லிவிடக்கூடும்.

ஆழப்பெரு மூச்சொன்றின் வெப்பத்தை
உன் வழித்துணைக்காய் காற்றில் செலுத்தி
உன்னுடனான பிணைப்பை விடுவித்துக்கொள்கிறேன்.


- அதீதத்தில் 





மறுதலிக்கும் கணங்கள்


தாழ்வாய் பறந்து மேலெழும்பும் பறவையின்
லாவகத்துடன் கடந்து விடுகிறாய்
என் ஒவ்வொரு பிரியத்தையும்.

மரங்களற்ற வனாந்திரத்தில் பூ தேடும்
வண்ணத்துப்பூச்சியின் பசியைவிடக்கொடிது
நீ மறுதலித்து செல்லும் கணங்கள்.

நீள் பிறப்பிற்கான வாதைகள் தொலையும் 
உன் நேசப்பரிமாறல்களை எதிர்ப்பார்த்து 
சுவாசங்களை இருத்திக்கொள்கிறேன்...


நிழல் பற்றி கடந்து செல்லும் மறு உயிராய்
என் இருப்புக்களை கவர்ந்துக்கொள்கிறாய்
வேறொருவருக்கான காதலை நீட்டித்துக்கொண்டு...



Thursday, 4 October 2012



அதீதத்தில் வெளியானது...


மீள் பிறப்பு





மன்னித்தலுக்கும் மரணித்தலுக்குமாய்
பகடையாக உருண்டு கொண்டு இருக்கிறது
வாழ்க்கை ஒவ்வொரு முறையும்

மன்னிக்க முடியாத செய்கைகளின்
பிரதிபலனாய் மரணித்துப்போவென
வலுவுற்ற வார்த்தைகளே சடங்காகிப்போகும்.

மீள்பிறப்பிற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும்
உன் வார்த்தையின் விளிம்பில் தொக்கி நிற்கும்

வலுக்கட்டாயமாக பெறப்படும் மன்னித்தல்களின்
மகிழ்வுகளில் என்னை ஏந்திக்கொள்கிறாய்

சிறு பிடிப்புக்களாய் நம்பிக்கையின்
இழைப்பற்றி சுவாசித்துக்கொள்கிறேன்

உன் விரல்களின் அசைவுகளில்
என் வாழ்வின் ஆயுளை எதிர்ப்பார்த்திருக்கிறேன்
உனக்கும் என் காதலுக்குமான சதுரங்கத்தில்..


Wednesday, 19 September 2012


மணல் வீடுகளாய் குமிந்திருந்த
ஒவ்வொரு ஞாபகத் துணுக்குகளும்
இடைவெளி பற்றிக் கரையத்துவங்கும்
வேளையில் மரணிக்கத்துவங்கியிருந்தேன்.

பொழுது சரியத்துவங்கிய அந்த நொடி
மிகச்சரியான கணமாகப்பட்டது
வாழ்வின் வெளிகள் மிகக்கவனமாய்
தன்னை இருள்சூழ ஆயத்தப்படுத்திக்கொண்டது.

இதுவரை மிகைப்படுத்தாத துயரம் தன்னை
முன்னிலைப்படுத்தத் துவங்கியது என் மரண நொடிக்கு
பிறிதொரு காரணத்தை காரணியாக்க விரும்பாமல்

விம்மிவெடிக்கும் ஒரு நினைவு மட்டும்
வெளியேற தோன்றாமல் உள் நோக்கி
பயணத்தை தொடங்கியது

மிதந்தலையும் காற்றினைக்குறுக்கி இழுத்து
இசைக்கும் குழலிசையாய் உன் நினைவுகளை
நிலை நிறுத்தி சுவாசத்தினை
கமறலென வெளிப்படுத்தி திருப்தியுறுகிறேன்

மிகப்பெரும் சரிவை நோக்கி
உருண்டோடத்துவங்கிய சுவாசம்
மென் தடைகளை வலிப்பிழிந்து
கடக்கத்துவங்கிய கணம் மெல்ல வெளியேறுகிறேன்.

Monday, 17 September 2012


உனக்கு மட்டும் நான் வித்தியாசப்பட்டதின்
காரணம் புரிந்தும் எனக்கு
ஒன்றேனும் வித்தியாசமாகப்படவேயில்லை
உன்னை ஒவ்வொரு முறை பார்க்கையிலும்.


கவிந்து நடக்கும்போதோ, 
கண்ணோடு நோக்கையிலோ
வார்த்தைகளில் குவிந்த கவனம்
மாறியதேயில்லை.

உணர்வுகளும், கருத்துக்களும்
பரிமாறிய இடங்களில்
பார்வை பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாயும்
நினைவிலில்லை.


தவறவிட்ட பேருந்துகளின் பயணங்கள்
உன் வாகனத்தில் தொடர்கையில் நானும்
என்றேனும் கவனித்தொதுங்கியிருக்கலாம்
தெரியாமல் உன் மேல் பட்டதை. 


விசைப்பலகையில் வார்த்தைகள்
தவறுதலாய் அழுத்தப்பட்டதாகவே 
இப்பொழுதும் உணர்கிறேன் நம்
தவறுகளை .

விரல் பிடிக்கையில் எவ்வித 
செல் மாற்றங்களும் உனக்குள்
நிகழவில்லையெனில் என் தோள்
பற்றும் தோழனாக இரு.


எல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே
தான் எப்பொழுதும் திருப்தி எனக்கு

தாகம் தணித்துவிடவோ
கறைகளை கழுவிடவோ
பச்சைகளை செழித்து விடவோ
கூரான கற்களை முனைமழுக்கிடவோ
இறுமாந்திருந்த கற்களை துகள்களாக்கிடவோ
கரைப்புரண்டு ஓடி கடலில் கலந்திடவோ
தான் தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்

சில வேளைகளில் பிண்டங்களும்
கீழத்தெருக்களின் எச்சில் இலைகளும்
எருமைகளின் சாணக்கழிவுகளும்
திருமணவீட்டின் எஞ்சிய விருந்தும்
ஒன்றாகவே கலந்து மிதந்துவருகின்றன.

இருந்தும் ஒவ்வொருவருக்கான நதியாகத்தான்
என்னை எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்




- நவீன விருட்சத்தில் ...

Saturday, 15 September 2012


ஒரு பரிவையோ,
ஒரு மன்னிப்பையோ,
ஒரு காதலையோ யாசிக்காத 
மௌனம் உதிர்ந்து விழுந்த 
ஒரு சருகினைப்போல் 
தன் ஆயுளை முடித்துக்கொள்கிறது.

                          *
ஒரு கவிதையின் இரு வார்த்தைகளுக்குள்
உறங்கும் மௌனம் பிறிதொரு
கணத்தில் ஒரு வார்த்தையாக
வெளிப்பட்டு விடுகிறது.
                         *

தவிப்புகளற்ற மௌனம் 
கடலலைகள் அரித்து செல்லும்
மணற்துகளின் ஏதோ ஒரு துளியாகிறது.

                        *